Thursday, November 23, 2017

இந்தியாவின் நதிகள் இணைப்பு; இயற்கைக்கு எதிரானது


நீண்டகால தாமதத்திற்குப் பிறகு இந்தியாவின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும், வறட்சியையும் எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தீர்வு என்கிற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது. 87 பில்லியன் டாலர் (ரூ. சுமார் 5.6 லட்சம் கோடி) செலவிலான இந்தத் திட்டத்தின் பயனால் இந்தியாவின் முக்கிய நதிகள் பல இணைக்கப்பட இருக்கின்றன. 

இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் மூலம் கங்கை உள்ளிட்ட இந்தியாவின் 60 நதிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதனால் பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் சேதம் கணிசமாகக் குறையுமென்று அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல், பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி தர முடியும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.

கடந்த மாதம் இந்தியாவின் பல பாகங்கள், அண்டை நாடுகளாள வங்கதேசம், நேபாளம் ஆகியவை பருவமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை எதிர்கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்தியாவின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன என்றால், இந்த ஆண்டு கூடுதலாக பெய்த பருவமழையினால் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்தது.

இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்தத் திட்டத்தால் கால்வாய்கள் மூலம் நதிகள் இணைக்கப்படுவது மட்டுமல்ல, பெரிய அணைகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சார உற்பத்திக்கும் வழிகோலப்படுகிறது.

மத்திய இந்தியாவில் ஓடும் கர்ணாவதி என்கிற கென் நதியில் ஓர் அணை கட்டப்பட இருக்கிறது. சுமார் 425 கி.மீ. நீளமுள்ள கென் நதியிலிருந்து 22 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு பெட்வா என்கிற நதியுடன் இணைக்கப்படுகிறது. இந்த இரு நதிகளுமே பா.ஜ.க ஆட்சியிலுள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்வதால் நதிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த கென் - பெட்வா திட்டம் பிரதமர் செயல்படுத்த விரும்பும் ஏனைய நதி இணைப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும். 

கென் - பெட்வா திட்டத்தைத் தொடர்ந்து அரசின் கவனம் கங்கை, கோதாவரி, மகாநதி ஆகிய நதிகளை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நதிகளில் ஆங்காங்கே அணைகளும், தடுப்பணைகளும் கட்டப்படுவதுடன் கால்வாய் வலைப்பின்னல்களும் உருவாக்கப்படும்போது அது வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இப்போதைக்கு கென் - பெட்வா நதி இணைப்புத் திட்டம் அரசின் முன்னுரிமை பெற்றிருப்பதால் இதற்கான எல்லா அனுமதிகளும் அவசர கதியில் தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கிந்தியாவில் பாயும் பார் - தாபி நதியை நர்மதாவுடனும், தாமன் கங்கா நதியை பிஞ்சல் நதியுடனும் இணைப்பதற்கான திட்டப் பணிகளின் அடிப்படை வேலைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதில் வியப்பில்லை. 

நதிகளை இணைக்கும் திட்டம் 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசால் முதலில் முன்மொழியப்பட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பில்லாததாலும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

ஒருபுறம், நதிகளை இணைக்கும் திட்டத்தில் அரசு முனைப்பு காட்டும்போது, மற்றொருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தத் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கென் நதி, பன்னா புலிகள் சரணாலயத்தின் வழியாகப் பாய்வதால் அந்த நதியில் ஏற்படுத்தப்படும் செயற்கை மாற்றங்கள் புலிகள் சரணாலயத்தை பெரும் அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கென் நதியில் அணை கட்டுவதற்காக அந்த நதி பாயும் வழியிலுள்ள காடுகளில் 6.5% அழிக்கப்பட்டாக வேண்டும். நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்படும் 10 மலைவாழ் கிராமங்களும், 2,000-த்துக்கும் அதிகமான குடும்பங்களும் இடம் பெயர்ந்தாக வேண்டும். இதற்கெல்லாம் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. 

கென் நதியின் மீது எழுப்பப்படும் 250 அடி உயரமும் இரண்டு கி.மீ. நீளமுள்ள உள்ள அணையால் 9,000 ஹெக்டேர் காடுகள் நீரில் மூழ்கும். நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும்பாலான பகுதி பன்னா புலிகள் சரணாலயத்தை ஆக்கிரமிக்கும் என்பது மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்திலுள்ள உலக கலாசார சின்னமான கஜுராஹோ ஆயத்துக்கு வெகு அருகில் அமையும். இதனால் அந்த வரலாற்றுச் சின்னம் பாதிக்கப்படலாம். 

உலகளாவிய அளவில் பெரிய அணைகள் கட்டுவது தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளை இணைப்பது என்பது பயனுள்ளதாகத் தோன்றினாலும் அது சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இயற்கை நடைமுறைக்கும் எதிரானதாக அமையக்கூடும் என்பதுதான் உண்மை!..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................(நன்றி: தினமணி)