Sunday, November 13, 2011

பெட்ரோல் விலை எப்போது குறையும் ?

 பெட்ரோல் விலை செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.  

இதுவரை எந்த எண்ணெய் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டவில்லை. அவர்கள்   ஆண்டு வருமான கணக்கில் பல கோடி லாபம் காட்டியுள்ளனர். அப்படியிருந்தும்  விலையை  உயர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட,  இதை  நிதியமைச்சகம் கண்டுகொள்ளவில்லை . பெட்ரோலிய அமைச்சரும் , நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை. 

இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 வசூலிக்கப்படுகிறது. மேலும் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 சதவீதமும், டீசலுக்கு 21.43 சதவீதமும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
இதில் ஏதாவது ஒரு வரியில் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதற்கு மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்டது.

விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா? 

ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார். 

அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். 

விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65, வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.  

 கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? 
ஏன் தீர்வைவரியை  ரூ.2 குறைத்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்த்து இருக்கலாமே?
ப்படி பெட்ரோல், டீஸல் விலையை   ஏற்றிவிட்டு  , கூடவே விலை வாசியையும் விண்ணை முட்டு அளவுக்கு ஏற்றி விடும் மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொட ஏன் யாரும் முன்வரவில்லை? இதை  இப்படியே விட்டால் நாட்டில் ஏழை , நடுத்தர மக்களின்  வாழ்க்கை தரம் மிகவும் மோசமான நிலையை  அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
  
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.

மக்கள்  தாங்கள் படும் கஷ்டத்தை  எப்போது அரசுக்கு புரியவைக்கிறார்களோ அப்போது தான் இதற்கு  விடிவு  காலம் பொறக்கும் போலும்......................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................
(நன்றி: தினமணி)

Monday, August 29, 2011

சம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா?


அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேரிட்ட விபத்தும், அந்தச் சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மூன்று உள்நோயாளிகள் இறந்ததுமே சான்றுகள்.

இது விபத்து என்றும், இத்தகைய சம்பவங்கள் எந்தவொரு கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட நிகழும், நிகழ்ந்தும் இருக்கின்றன என்று அரசுத் தரப்பிலோ அல்லது அரசு மருத்துவமனை ஊழியர்கள் அமைப்போ கூறலாம்.

அந்த வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தோன்றினாலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இத்தகைய விபத்துகள் வெவ்வேறு விதங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதும், இதற்கு அடிப்படைக் காரணம் மருத்துவமனைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் என்கிற உண்மையை அவர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மாநிலத் தலைநகரில், குறிப்பாக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அடிக்கடி வந்துபோகும் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளிலேயே இத்தகைய பராமரிப்புக் குறைபாடு இருக்கிறது என்றால், மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும்கூட நின்றுகொண்டிருக்கையில், அண்மையில் கட்டப்பட்ட கட்டடங்கள் விரிசல் விட்டும், கதிரொளித் தடுப்புப்பலகைகள் உடைந்தும், கழிவறைக் குழாய்கள் இடம்பிறழ்ந்தும் கிடக்கின்ற அவலத்தைக் கண்கூடாகக் காண முடியும்.


புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் விரிசல் என்றால் அது குறித்து, புகார் தெரிவிக்கவும், குறிப்பிட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமை மருத்துவர் கடிதம் எழுத முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்ய விரும்புவதில்லை. நல்லது செய்யப்போய், பெரிய இடத்துக்கு விரோதமாகி எங்கேயாவது இடமாற்றம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற சுயநலக் கவலையில் மெத்தனமாக இருப்பதுதான் இத்தகைய பராமரிப்புப் குறைபாட்டுக்கும், மரணங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

மருத்துவத் துறைக்கு அரசு பெரும் நிதியை ஒதுக்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,592 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 2011-12-ம் ஆண்டுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்கள். அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கிறது. அரசுக் கட்டடம் என்றாலே ஒரு பங்கு மணல் கூடுகிறது. வெறும் ஏ.சி. கருவிகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளும் அடிக்கடி (சில இடங்களில் எப்போதும்) பழுதாகிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் சம்பந்தப்பட்ட ஊழியர்தான் என்று சொன்னால் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குக் கோபம் வருகிறது.

தமிழ்நாட்டின் எந்த ஓர் அரசு மருத்துவமனையிலும் உள்ள சாக்கடைகள், கழிவறைகள் போல நோய்பரப்பும் இடம் வேறு எதுவுமே இருக்க முடியாது. கேட்டால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் இவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ன செய்வது? என்று சொல்வார்கள்.

இதே ஏழைகளைத்தான் அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா போன்ற மருத்துவமனைகள் கிராமத்துக்கே போய் அழைத்து வருகிறார்கள். அவர்களும் எந்தக் கழிப்பறையையும் முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்தான். மாற்றுஉடை இல்லாதவர்கள்தான். ஆனாலும் அந்தப் பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன. எச்சில் துப்பக் கூச்சமும், அசிங்கம் செய்ய அச்சமும் தருகிற தூய்மை அங்கே இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பராமரிப்புத்தான். அங்கேயும் ஏ.சி. கருவிகள் வழக்கமாகப் பழுதுபார்க்கப்படுகின்றன. ஆனால், அந்த ஏ.சி. கருவிகள் 40 விழுக்காடு கமிஷன் தனியாக வாங்கிக் கொண்டு வாங்கப்பட்டவை அல்ல.

தனியார் மருத்துவமனைகளிலும் பராமரிப்புக் குறைபாடுகளால் ஏதோ ஒரு நேரத்தில் விபத்து நேரிடலாம். அப்படி நேர்ந்தால், அந்த விபத்துக்குக் காரணமானவர்கள் அடுத்தநாள் அங்கே வேலையில் இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது. ஆனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர் சாவுக்குக் காரணமான பராமரிப்புக் குளறுபடிக்கு எந்த ஊழியரை அல்லது மருத்துவரைப் பொறுப்பாக்கினாலும், அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடக்கும். இந்த விபத்துக்குக் காரணம் அரசு ஊழியர் அல்ல, அரசுதான் என்பார்கள்.

அரசு ஊழியர் யாராவது தவறு செய்தால், "ஏதோ தவறு நடந்துவிட்டது. இதற்காகத் தவறு செய்தவரின் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. பாவம் பிழைத்துப் போகட்டும்' என்று மேலதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர, தங்களுக்குச் சம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றியோ, அவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பது பற்றியோ யாரும் கவலைப்படுவதாக இல்லை.

தலைமையின் அடிப்படைத் தகுதியே 'தவறைத் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும் தயங்காத நேர்மையும், நிர்வாகத் திறமையுடையாவராகவும் இருப்பதுதான்'.

இந்தியாவின் எந்தவொரு அரசியல்வாதியிடமும் இல்லாதயோன்றை, அரசு மருத்துவமனைகளில் தேடினால் மட்டும் கிடைக்குமா என்ன?.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................

Friday, August 12, 2011

கறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு?புலி வருது புலி' கதையாக, கடைசியில் உண்மையாகவே புலி வந்துவிட்டது. ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் 2.5 பில்லியன் டாலர் என்று அறிவித்துள்ளது ஸ்விஸ் நேஷனல் பாங்க்.  இதுவெறும் அறிவிப்பு மட்டுமே. 

இந்தப் பணம் யார் யாருக்குச் சொந்தம் என்கிற பட்டியல் எல்லாம் வெளியிடப்படவில்லை. அது வெளியிடப்படுமா என்பதும் தெரியவில்லை.  குறிப்பிட்ட சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, "கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள், எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று கூறியிருந்தார்.  

இப்போது ஸ்விஸ் நேஷனல் வங்கியே இந்தியர்கள் தங்கள் நாட்டில் சேமித்து வைத்துள்ள பணம் 2.5 பில்லியன் டாலர்கள் என்று கூறிவிட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 11,250 கோடி!  இந்தத் தொகை 2010-ம் ஆண்டின் இறுதி வரையிலான புள்ளிவிவரம் என்கிறது ஸ்விஸ் நேஷனல் பாங்க். ஆனால் இந்தத் தொகை குறைவு என்று கூறுகிறார் ஸ்விஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு வங்கியின் உயர் அதிகாரி. 

குறைந்தபட்சம் 15 முதல் 20 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.  இந்த வங்கி அதிகாரி சொல்லும் கணக்கைக்கூட நாம் அதிகம் என்று நினைத்து இதில் சராசரியாக 10 பில்லியன் டாலர் என்று வைத்துக்கொண்டாலும், சுமார் 45,000 கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் புழங்குகிறது என்று கருத இடமிருக்கிறது. இப்போதுதான் நமது அரசியல்வாதிகளின் துணையோடு இந்திய அரசு எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.  

ஸ்விஸ் வங்கி தெரிவிக்கும் இன்னொரு தகவல் நம் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 500 மில்லியன் (ரூ. 2,250 கோடி) இந்தியர்களின் (கறுப்புப்) பணம் சேமிப்பிலிருந்து குறைந்துள்ளது என்று ஸ்விஸ் நேஷனல் பாங்க் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் திடுதிடுப்பென வங்கியில் சேமித்து வைத்திருந்த பணம் குறைவானேன்? கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதுதான் இதற்குக் காரணம் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.  

கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிலர்தான் இப்படி ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பெயர், பட்டியலில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல வழிகளிலும் பணத்தை வேறு நாடுகளுக்குக்கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் இதன் பொருள்.  இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் அமலில் உள்ள நாடுகளான சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகியவற்றின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கறுப்புப்பணம்  இந்தியாவுக்கு முதலீடுகளாகக் கொண்டுவரப்படுகின்றன. 

அன்னிய நேரடி முதலீடு, இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு என பல வழிகளிலும் இந்தக் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் ஏற்கெனவே வந்துவிட்டது.  இப்போது 2011-ம் ஆண்டின் அரையாண்டு முடிவுற்ற நிலையில், மேலதிகமான பணம் இந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்குள், வெள்ளைப் பணமாக மாறி வந்திருக்கவும்கூடும்.  இந்தியாவில் பங்கு வர்த்தகத்தைக் கண்காணிக்கும் செபி அமைப்பு மற்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகியன இத்தகைய முறைகேடுகளை மிகவும் நுட்பமாகப் பார்ப்பதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசு, பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்கிற நிலைப்பாட்டில் செயல்படும்போது அவர்களால் இந்த அமைப்புகளை என்னதான் செய்துவிட முடியும்?  இவ்வாறு முறைகேடாக அன்னிய நேரடி முதலீடு வருகிறது என்று தெரிந்தவுடன் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? இதற்கான வழிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேகமாக ஓட்டையைப் பெரிதாக்குகிறது. வழிகளை அகலமாக்கி, வெளியேபோன பணம் சீக்கிரம் வந்து சேர்ந்தவுடன் அடைக்கலாம் என்று சிந்திக்கிறது.  இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு உள்ள அளவை, கடந்த இரு ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்தி, அனுமதித்தது நிதியமைச்சகம். கடந்த பட்ஜெட்டில்கூட நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு 45,000 கோடி ரூபாய் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டின் அளவையும்கூட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

 மொரிஷியஸ் நாட்டுடன் நிலவும் இப்போதைய இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, புதிய ஒப்பந்தம்போட வேண்டும் என்று மத்திய அரசு பேசிக்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடாகவும் இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடாகவும் வந்த பணம் எவ்வளவு, அப்படி முதலீடு செய்த நிறுவனங்கள் எவையெவை, இவை உண்மையாகவே பலகாலமாக சிங்கப்பூர், மொரிஷியஸ், துபாய் நாடுகளில் இருந்துவரும் அமைப்பா அல்லது திடீரென முளைத்த அமைப்பா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. 

அப்படியெல்லாம் நமது அரசு கவலைப்பட்டுக் கொள்வதாகவே இல்லை.  வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், நேற்று முளைத்த காளான் நிறுவனங்கள்கூட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப்பணத்தை நீங்கள் சட்டப்பூர்வ முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்பதும் ஒன்றுதான்.  

அன்னிய முதலீட்டுக்கு எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து கேள்விமுறை இல்லாமல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படும் 2.5 பில்லியன் டாலர்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று யார் சொன்னது?

 
.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................

( நன்றி:தினமணி)

Saturday, July 2, 2011

கல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்?

முனிவர்களும் ஞானிகளும் மாணவர்களைத் தங்களது குழந்தைகளாக நினைத்து, தங்களோடு வைத்து உணவு, உடை, உறையுள் அனைத்தும் தந்து, கல்வி கற்று கொடுத்த நாடு இது.

"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்றாள் அவ்வைப் பெருமாட்டியும்,

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது அதிவீரராமபாண்டினின் வெற்றிவேட்கை என்கிற நீதிநூல்.

மூன்று கல் தொலைவுக்கு ஒரு கல்விக்கூடம் என்று கொண்டு வந்த கல்விகண் திறந்த காமராஜ் முதன்முதலாக மாணவர்களிடம் சொன்னது இதுதான்

"பிள்ளைகளா, பிச்சை எடுத்தாவது படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கன்னேன். நான் சொல்லுதேன்; நீங்க போயிப் பள்ளிக்கூடத்திலே படிங்க. நான் போயி உங்களுக்காகப் பிச்சை எடுக்கேன்னார்.''

அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் மாநாட்டில் பேசும்போது அவர் சொன்னது, ''ஏழைப் பிள்ளைகள் நல்லா சொல்லிக் கொடுங்கய்யா, ஏமாத்திறாதீங்க. படிக்க வச்சிட்டீங்கன்னா பொழச்சுக்கிடுவாம்ய்யா''. ஒருநேரம் சோறு போட்டாவது ஏழைகளைப் பள்ளிக்கு வர வைக்க ஏற்பாடு செய்தார்.

1963-ல் தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர். காமராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, "காமராஜ் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி' என்றார். அதனால்தான் எம்.ஜி.ஆர். காமராஜின் மதிய உணவை சத்துணவு ஆக்கினார்.

1980 சட்டப்பேரவைத் தேர்தலிலே பேசிஎம்.ஜி.ஆர், கும்பகோணத்திலே எங்கள் தாய், வீடுகளிலே பத்துப் பாத்திரம் தேய்த்து என்னையும் என் அண்ணனையும் காப்பாற்றினார். வேலைக்குப் போகும் நேரங்களிலே என்னையும் என்னுடைய அண்ணனையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவார். காரணம், பசியில் நாங்கள் பக்கத்து வீட்டில்போய் கையேந்திவிடக் கூடாது என்று சொன்னார். மேடைகளிலே தனது உண்மை வாழ்க்கையை எம்.ஜி.ஆர். சொன்னார். அதனால்தான் சோறு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். சத்துணவை அதனால்தான் போட்டேன் என்றார்.

அவர்கள் எல்லோரும் கல்வியில் அக்கறை காட்டியதற்குக் காரணம், அவர்களுக்கு கிடைக்காத அந்த சரியான கல்வி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் எண்ணத்தில் தான். அந்தக் கல்வியின் நிலைமை இன்று என்ன?

அரசுப் பள்ளிக்கூடங்களிலும், மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களிலும் மாநிலத்திலேயே மாணவர்களும் மாணவிகளும் முதலாவதாக வருகிறார்கள் ஆனால், அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களும்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களிலே சேர்க்கின்றனர்.

நடுத்தர மக்களும் தங்கள் நிலைபுரியாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளிலே தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுக் கட்டணம் கட்ட முடியாமல் அவமானப்படுகின்றனர்.

இதன் காரணமாகதான் மேட்டுப்பாளையத்தில் ஒரு தாய், கேவலம் யு.கே.ஜி. படிக்கிற தன் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

முதலில் அரசு செய்ய வேண்டியது அரசுப் பள்ளிக்கூடங்கள் பெற்றிருக்கிற தேர்ச்சியை விளம்பரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் எல்லாப் பிரிவினரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கூடத்தில் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
 
கொள்ளையும் அடித்துவிட்டு, கல்வித் தந்தை, கல்வி வள்ளல், கல்விக் கடவுள் என்று பட்டம் போட்டுக் கொள்கிறவர்களைத் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

நான்கு, ஐந்து ஆண்டுகளிலே கல்விச்சாலைகளை அமைத்தவர்கள் கோடீஸ்வரர்களாக வலம் வருகிற கொடுமையைத் தடுத்தேயாக வேண்டும். இன்னொரு கொடுமை, ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிவிட்டாலே போதும், பாதிப் பேர் கல்வி வணிகர்களாகி விடுகின்றனர்.

காந்தியடிகள் படத்தையும் காமராஜ் படத்தையும் போட்டுப் பிழைப்பு நடத்துகிற கல்விக் கொள்ளையர்கள், எல்லோருக்கும் கல்வி அளிக்க ஆணையிட்ட காமராஜ், எம்.ஜி.ஆர் படங்களையோ, சிலைகளையோ தொடக்கூடத் தகுதியற்றவர்கள்.

அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று மூன்று பிரிவுகளாகக் கல்விச்சாலைகள் செயல்படுகின்றன. ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றும், வசதி படைத்தவர்களுக்குத்தான் தனியார் பள்ளிகள் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பணம் படைத்திருந்தால் நல்ல கல்வி, ஆங்கிலக் கல்வி என்றும், பணம் இல்லாத ஏழைகளுக்கு அரசுப்பள்ளி என்பதும் சமத்துவ, சமதர்ம சமுதாயம் என்கிற தத்துவத்தையே கேலி செய்வதாக அல்லவா இருக்கிறது?

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் அதிகச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலோனோர் சிறப்பான கல்வி மாணவர்களுக்கு கற்றுத் ருவதில்லை.

தனியார் பள்ளிகளில், தரமான கல்வி என்கிற பெயரில் பெற்றோர்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை கேள்விகேட்க ஆளில்லை என்கிற நிலைமைதான் உள்ளது.தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. அரசுதானே பெற்றோர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, இதைத்தடுக்க ஏதாவது வழிகள் செய்ய வேண்டும்.


கல்விதான் கட்டாயம் இலவசமாகத் தரப்பட வேண்டியது. அதனால் அரசு அதை இலவசமாகத் தருவதற்கு முயல வேண்டும், மற்ற இலவசங்களைப் புறந்தள்ள வேண்டும். மக்கள் வருத்தம் கொள்ள மாட்டார்கள்.

அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமே முக்கியமல்ல. அனைவருக்கும் தரமான கல்வி என்பதும், இலவசக் கல்வி என்பதும்கூட முக்கியம். ஆனால், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தரமான கல்வி தரப்படாது என்று, அந்த குழந்தைக்கு தரமான கல்வி மறுக்கப்படுவது அநியாயத்திலும் அநியாயமல்லவா?
.
.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

.................................................................... 

(di)

Sunday, June 26, 2011

என்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்?


தமிழகத்தில், புதிது புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை செலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளுக்கு இருக்கும் மதிப்பு, அரசு பள்ளிகளுக்கு இல்லாததால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி. துறை வளர்ச்சி, தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி., துறை வளர்ச்சியால், ஆங்கில அறிவும், இன்ஜினியரிங் படிப்பும் இருந்தாலே, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை ஆங்கில வழியில் தரவேண்டும் என்ற ஆசை அனைத்து பெற்றோரிடமும் காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், முன்னணி பள்ளிகளில் சேர்க்கவும் போட்டி அதிகரித்துள்ளது.

மாணவர் சேர்க்கையில் ஏற்படும் போட்டியை சாதகமாக எடுத்துக்கொண்டு, தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டணங்களை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுகுறித்த புகார் இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுந்தது. இதனாலேயே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் எனவும், கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுப்பட்டன. ஆனாலும், தனியார் பள்ளிகள் தங்களுக்குண்டான மவுசை விட்டுக்கொடுக்க தயாரில்லை. சமச்சீர் கல்விக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வந்த, அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் புதிய பள்ளிகளை துவக்கி விட்டன.

இப்பள்ளிகளில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை எல்.கே.ஜி., கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ப்ளஸ் 2 படிப்புக்கென பிரத்யேக பயிற்சியளிக்கும் சிறப்பு பள்ளிகளில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தாலும், புத்தக கட்டணம், பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர செலவினங்களை பட்டியலிட்டு, விரும்பும் கட்டணங்களை வசூல் செய்வதை தனியார் பள்ளிகள் விட்டுக்கொடுப்பதேயில்லை. இதனால் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டாலும், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சேர்ந்தால் கூட, ஆண்டுக்கு அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரையே செலவாகிறது. இன்ஜினியரிங் படிப்புகளை பொறுத்தவரை கவுன்சலிங் மூலம் சேரும் பட்சத்தில், முதல்தர கல்லூரிகளுக்கு, 40 ஆயிரம், மற்ற கல்லூரிகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பெற்றோரின் சுமையை குறைக்க முதல் தலைமுறை குழந்தைக்கான கல்வி உதவித்தொகையும், கல்விக்கடனும் வேறு சலுகையாக வழங்கப்படுகின்றன. மேலும் இக்கல்லூரிகளுக்கு தனித்தனியே லேப் வசதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியுள்ளது. இவை எதுவும் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு தேவைப்படுவதில்லை. ஆனாலும் இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்பை விட, பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர்.

எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்க, இரண்டு நாட்களுக்கு முன்பே பெற்றோர் வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகிறது. ஆனால், அரசு பள்ளியில், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் அனைத்தும் அரசே செலுத்தியும், பல்வேறு சலுகைகள் வழங்கியும், மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. செயல்வழிக்கற்றல் திட்டம், படைப்பாற்றல் கல்வி முறை என புதுப்புது கல்வி முறை அமல்படுத்தியும் அரசு பள்ளி குறித்த எண்ணம் மக்களிடையே மாறவில்லை.

தமிழக உயர்கல்வித்துறையில் இந்நிலை தலைகீழாக உள்ளது. அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு பல்கலைகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவே அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் கூட அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேரவே, பெரும் பணக்காரர்கள் கூட விருப்பம் தெரிவிக்கின்றனர். இதேபோல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, செல்வந்தர்களும் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைக்கும், கல்வி வியாபாரம் ஒழியும்......................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................

(dm )

Monday, June 20, 2011

ஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா?


இன்று இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது ஊழல் ஒழிப்பு பற்றி தான். சமூக நீதியை நிலைநாட்டி, நேர்மையான செங்கோல் ஆட்சி செய்த பல நீதிமான்கள் வாழ்ந்த இந்த நாட்டில், இன்று லஞ்சமும், ஊழலும், கறுப்பு பணமும் நாடு முழுதும் எய்ட்சை விட ஒரு கொடிய நோய் போல் பரவி உள்ளது. அடுத்தடுத்து வரிசையாக நடந்த ஊழல்களால் மக்கள் நொந்து நூலாகிபோயுள்ளனர். ஆனால் இப்போதுதான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஊழல் அப்படினா என்ன?

முதலில் நாம் ஊழல் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக “ 1 மூட்டை சிமெண்டுக்கு, 3 மூட்டை மணல் தான் போட்டுதான் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் 1 மூட்டை சிமெண்டுக்கு, 5 மூட்டை மணலை போட்டு வீட்டை கட்டிவிட்டு, மீதி வரும் சிமெண்டு மூட்டையை திருட்டு தனமாக விற்று பணத்தை சேர்த்தால் அதற்கு பெயர்தான் ஊழல் ”


ஊழலின் ஆணி வேர் எது?

ஊழலின் ஆணி வேறே நமது சட்டங்களில் உள்ள ஓட்டைகளும், தவறான அரசு நிர்வாகமும், கொள்கைகளும், நடவடிக்கைகளும் தான். சொல்ல போனால் நமது சட்டங்கள்தான் பெரும்பாலும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றுகிறது. அதனால்தான் அவர்கள் எப்படியும் தப்பித்துவிடலாம் என்று தைரியமாக ஊழலை செய்கிறார்கள்.

அதேபோல் பெரும்பாலும் ஆளுங்கட்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் நண்பர்களும், நெருங்கிய தொழில்அதிபர்களும் மற்றும் பண பேராசை பிடித்த பொதுமக்களும்தான் ஊழலை செய்கிறார்கள்.

விண்ணை முட்டும் அளவுக்கு ஊழல்கள்?

உலகத்துக்கே நீதியை போதித்து, தர்மத்தின் வழியில் நடந்த பல சான்றோர்கள் வாழ்ந்த இந்த இந்தியாவில், இன்று ஊழல்களின் பட்டியல் விண்ணை முட்டும் நீண்டு கொண்டேபோகிறது.

1975 இல் நடந்த லாட்டரி ஊழல் தான் முதலில் ஊழல்களின் கணக்கை ஆரம்பித்தது. அதற்கு பின் வரிசையாக போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல், ஹவாலா ஊழல், பீகார் கால்நடை தீவன ஊழல், சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல், பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல், தெகல்கா ஆயுத பேர ஊழல், போலி முத்திரைத்தாள் ஊழல், மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல் லலித் மோடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், எஸ் பேண்டு ஊழல் என படையெடுத்தன.

ஆனால் இவ்வளவு ஊழல்களை செய்தவர்களில், ஒரு சிலர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாலியாக வசதி, வாய்ப்புகளோடும், ஆட்சி, அதிகாரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இவர்களை தண்டிக்க சட்டமே இல்லையா?

1860 இல் இந்திய தண்டனை சட்டம் மற்றும் 1988 இல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள்தான் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் பெரிய, பெரிய ஊழல்களை எளிதாக செய்கிறார்கள். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் போலீசும், சிபிஐயும், முதலில் மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் ஊழல் செய்பவர்கள் ஆட்சி, அதிகாரம், பணபலம், ஆள்பலம், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் ஆகியவற்றின் மூலம் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள்.


பிரதமரே ஒப்புகொள்கிறார்?

"ஊழலை ஒழிப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களும், நடைமுறைகளும், நிர்வாக அமைப்புகளும், எந்த வகையிலும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது."

இதை சொன்னது ஊழல்களால் நிரம்பி வழியும் காங்கிரசை சேர்ந்த, நமது இந்திய பிரதமராக உள்ள மன்மோகன் சிங் தான்.

ஆக பிரதமருக்கே நன்றாக தெரிகிறது, நாட்டில் உள்ள சட்டங்களும், அதை நிறைவேற்றும் நீதிமன்றங்களும், அரசின் நிர்வாக அமைப்பும் மக்களுக்கு பயன் தரக்கூடிய எதையும் முறையாக செய்யவில்லை என்று.

லோக்பால் சட்ட மசோதா அப்படினா என்ன?

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.

லோக்பால் சட்டத்தின் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் இந்த லோக்பால் சட்டம்.

இந்த லோக்பால் மசோதா, 1969-ஆம் ஆண்டிலிருந்து 42 வருடங்களாக நிறைவேறாமல், பாராளுமன்ற கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 10 முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசினால் சொல்லப்படும் லோக்பால் மசோதா:

ஊழல் தடுப்பு லோக்பால் அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது.
ஒரு விவகாரம் பற்றி புகார் தெரிவிக்காமலே, சுயேச்சையாக லோக்பால் அமைப்பால் விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை.
புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் இதற்கு கிடையாது.
மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும்.
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை திரும்ப பெற வழி வகைகள் ஏதும் இல்லை.
ஊழல் புகார் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை
இதுபோன்று அரசின் லோக்பால் மசோதா, தவறுசெய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் வகையில்தான் உள்ளது.

ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா?

இன்று இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு கந்தியவாதியாக அறியப்படும் ஹசாரே மற்றும் அவருடன் உள்ள சாந்தி பூசன், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் பூசன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள், அரசின் லோக்பால் சட்ட மசோதா சரியாக இல்லை என்று போர்க்கொடி தூக்கினார்கள். ஹசாரே உண்ணாவிரதமும் இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹசாரேவின் குழு, அரசின் லோக்பால் சட்ட மசோதாவிற்கு எதிராக தாங்களே ஒரு சட்டத்தை முன் வைத்தார்கள். அதுதான் ஹசாரே குழுவின் ஜன் லோக்பால் மசோதா.


ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள்:

மத்திய அரசு ஊழல் எதிர்ப்பு அமைப்பாக "லோக்பால்" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) அமைப்பை நிறுவுதல், மாநில அளவில் லோக்பாலுக்கு துணைபுரிய "லோக் ஆயுக்தா" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நியமித்தல் என்பதும்,

இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில், எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதும்,

லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும் என்பதும்,.

ஒவ்வொரு வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும்,

லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும் என்பதும்,

அன்னா ஹசாரேவின் குழுவினால், அரசின் முன் வைக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள் ஆகும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா தான் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பது ஹசாரே குழுவின் போராட்டம் ஆகும்.

சட்டங்களால் ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியுமா?

நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தபடவில்லை என்பது ஒரு படிக்காத பாமரனுக்கும், ஏன் பிச்சைகாரனுக்கும் கூட தெரியும்.

நீதிமன்றத்தில் நீதிதேவதை ஆட்சி, அதிகாரத்தால் மிரட்டப்படுவதும், பணபலத்தால் விலைக்கு வாங்கபடுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே....

ஏதோ ஒரு சில நல்ல நீதிபதிகளால் தான் இன்று நீதி நிலைநாட்டப்படுகிறது. (எடுத்துக்காட்டாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா கைது, அதுவும் கைது மட்டும்தான், ஆனால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை கொடுக்க முடியவில்லை).

அதேபோல் இன்று நேர்மையாக இருக்கும் நீதிபதிகள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (எடுத்துக்காட்டாக கனிமொழியின் ஜாமினை பற்றி விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் ‘எங்களை ஆளவிட்டா போதும்’ என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள் )

இன்று உள்ள சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியாது. மிக கடுமையான, நேர்த்தியான புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் பயத்தின் காரணமாக கொஞ்சமாவது குறைக்க முடியும்.

அதைவிட அந்த சட்டத்தை செயல்படுத்த நீதி தவறாத நீதிபதிகளும், கடமை தவறாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருந்தால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட இயலும். ஆனால் இதெல்லாம் இந்த கலி காலத்தில் நடக்குமா?

ஊழலை குறைக்க வேறு என்ன வழி?

மிகப்பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்ட ஊழல், லஞ்சைத்தை கொஞ்சமாவது குறைக்க வேண்டுமென்றால், அது நம் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது.

நம் நாட்டில் உள்ள 20 கோடி வீடுகளில், 8 கோடி வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் செய்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. நாட்டின் நிலைமை இப்படி இருந்தால் எப்படி லஞ்சம், ஊழல் குறையும்?

அதனால் முதலில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் சிறுவயது முதலே லஞ்சம், ஊழல் செய்யக்கூடாது என்ற உணர்வை பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க வேண்டும். அதைவிட முதலில் பெற்றோர்கள் உருப்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளிடம் அதை எதிர்பார்க்க முடியும். (எடுத்துகாட்டாக கருணாநிதி ஊழல் செய்கிறார். அதை பார்த்து அவருடைய மகள் கனிமொழியும் ஊழல் செய்கிறார்). 

அடுத்ததாக கல்வியில் புதிய புரட்சி நடந்தே ஆக வேண்டும். கல்விகூடங்களில் லஞ்சம், ஊழலை செய்யக்கூடாது என்று, தொடர்ந்து மாணவர்களிடம் கற்பிக்கப்பட வேண்டும்.

இன்று நேர்மையாக (ஒரு சிலர் இருக்குகிறார்கள்) இருப்பவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் போது, அரசாங்கம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், பாராட்டும் அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பத்திரிக்கைகளும், T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும் அவர்களை பாராட்ட வேண்டும்.

அரசாங்கத்தில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் விரைவாக வேலை நடக்கிறது. இதை ஒழுங்குப்படுத்த அரசு பல புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த சின்ன, சின்ன லஞ்சம்தான் அவர்களை பெரிய ஊழல் செய்ய துண்டுகிறது. இதற்கு ஒரு தீர்வை கண்டுபித்தாலே, நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் பெரும்பாலும் குறைக்க முடியும்.

அரசாங்கத்தின் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள்தான் நாட்டில் பெரிய ஊழல்கள் நடக்க காரணமாக அமைகிறது. இவைகள் தேவைதான், ஆனால் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். (பெரிய தொழில் அதிபர்கள் தாங்கள் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பொட்டி, பொட்டியாக பணத்தை கொடுத்து காரியத்தை சாதித்துகொள்கிறார்கள்)
 
லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடுமையான, நேர்த்தியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டங்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், ஓட்டைகள் இல்லாமல், சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்தால் கூட, அவர்கள் செய்யும் குற்றங்களில் இருந்து தப்ப முடியாதபடி இருக்க வேண்டும். (100% தூய்மையான சட்டமாக கூட இருக்க வேண்டாம். ஒரு 80% தூய்மையாக உள்ள சட்டம் இருந்தால் கூட போதும்) 

இவை அனைத்திற்கும் அரசாங்கம் மனது வைக்க வேண்டும். அரசாங்கம் செய்ய மறுத்தால் அதை எதிர்த்து மக்கள் அமைதியான போராட்ட முறைகளை கையாண்டு எதிர்ப்புகளை காட்ட வேண்டும். வன்முறைகள் என்றுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. (அதாவது பொது வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராடுதல், அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை தேர்தலில் மக்கள் ஓட்டு போடாமல் புறக்கணிக்கத்தல், ஊழல் எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள், இன்னும் பல... ) 

நாட்டில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒன்றாக சேர்த்து இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும், ஏன் அனைத்து கிராமங்களிலும் கூட போராட்டம் நடத்த வேண்டும். இந்த போராட்டத்தில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பங்குபெறுமாறு செய்ய வேண்டும்.

மக்களும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு என்று வாயால் சொல்வதோடு நிறுத்திவிடாமல் வீதிகளில் இறங்கி போராட முன்வரவேண்டும். வெறும் SMS அனுப்புவதோடு மட்டும் நிறுத்திவிட கூடாது. ஏனென்றால் லஞ்சமும், ஊழலும் குறைந்தால் அதனால் ஏற்படும் பலனை அடைவது மக்கள்தான்.

கிரிக்கெட் பார்க்க லீவு போடும் நம் மக்கள், இந்த மாதிரியான போராட்டங்களுக்கு ஒரு நாள் லீவுபோட்டு களத்தில் இறங்கி போராட முன்வரவேண்டும்.

எத்தகைய போராட்டத்திற்கும் ஒரு தலைவன் இருந்தே ஆக வேண்டும்.
இந்த ஊழல் ஒழிப்பு போராட்ட தலைவன் ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகவும், பணத்தின் மீது பேராசை இல்லதாவராகவும் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமும், சமாளிக்கும் அளவுக்கு அறிவும்,
திறமையும் இருக்க வேண்டும். அவருடன் இருப்பவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையான மக்களுக்கான இயக்கமாக அது செயல்படும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவார்கள்.

சட்டங்கள் மூலம் ஊழல் செய்தபின் தான் தண்டனை கொடுக்க முடியும். ஆனால் ஊழலை ஊழல் செய்வதற்கு முன்னரே தடுக்க வேண்டுமெனில், ‘’தங்கள் உழைப்பால் கிடைக்கும் பணத்தின் மூலமே வாழ்க்கையை நடத்த வேண்டும், அதுவே சிறந்த வாழ்க்கை’’ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு நமது அரசாங்கமும், ஆசிரியர்களும், பத்திரிக்கை, T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும், சினிமாதுறையினரும் மனது வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலத்தில் லஞ்சம், ஊழல்கள் பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது......................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

.................................................................... 

Sunday, June 5, 2011

4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......


பணக்காரர்கள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஏழைகள் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் இக்கால அரசியல்வாதிகள், அதிகாரிகள் மத்தியில், சாமானிய ஏழை மக்கள், கிராமப்புற விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பற்றியும் சிந்திக்கும் சிலர் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்படி சொல்ல காரணம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சொன்ன சில கருத்துகள்தான்.

""வங்கிகள் தங்களுடைய கடன் பிரிவுக்கு சிறப்பு மேலாண்மைக் கல்லூரிகளில் (பிசினஸ் ஸ்கூல்) எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகளையே பணிக்கு அமர்த்துவது சரியல்ல'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே. சக்ரவர்த்தி.

அதற்கு அவர் கூறியிருக்கும் காரணமும் மிகவும் பொருத்தமானது.

பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்திலிருந்தே கான்வென்டில் படித்து வளர்ந்த மத்திய தர அல்லது பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் இந்தப் படிப்பை முடித்து வேலைக்கு வருகிறார்கள்.

இது போன்று வேலைக்கும் வரும் மாணவர்களுக்கு, நேர்மையையும், நாணயத்தையும் தங்களது உழைப்பையும் நம்பும் சாமானியத் தொழிலாளர்கள், விவசாயிகள் பற்றிய வாழ்க்கை முறைகளும், தேவைகளும் தெரிவதில்லை. வங்கிகளில் கடனுக்காக அவர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்து அவர்கள் மீது சந்தேகப்பட்டு கடன் வழங்க மறுத்துவிடுகின்றனர் அல்லது ஜாமீன் கேட்கின்றனர்.

ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மிகவும் கெடுபிடியாக வசூல் செய்து நோகடித்துவிடுகிறார்கள்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள் கடன் ரத்துக்கு தனித்தனியாக விண்ணப்பித்து நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக, தங்களுடைய கடன் பிரச்னையை இந்த தேசத்தின் தொழில்துறைக்கே நேர்ந்துவிட்ட மிகப்பெரிய சோதனையாகச் சித்திரித்து விடுகிறார்கள்.

இந்த நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக தொழிலதிபர்கள் வாங்கிய கடன்களை வசூலிக்காமல் நிறுத்தி வைக்கவும், வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்யவும், மேற்கொண்டு தொழில் செய்ய முதலீட்டு ஊக்குவிப்பு வழங்கவும் மற்றும் தனி மானியம் போன்றவற்றை வழங்கவும் பரிந்துரை செய்யவைத்து கோடானு கோடி ரூபாயை ""காந்தி கணக்கில்'' எழுதிவிடுகிறார்கள்.

நம் நாட்டில் தொழில், வர்த்தகத் துறைகளுக்கு பட்ஜெட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகளை கொடுக்கிறார்கள்.

ஆனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், புதிய தலைமுறை தொழில் முனைவோர்கள் வாங்கும் கடன்கள் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கான கடன்களாகவே கருதப்படுகின்றன. எனவே கடன் சுமையைக் குறைக்கவோ, தள்ளுபடி செய்யவோ ""அருகதையற்ற தண்டச் செலவுகளாகவே'' அவற்றைக் கருதுகின்றனர்.

மானியங்களால்தான் இந்த நாட்டின் செல்வமே கொள்ளைபோகின்றன என்று சில பொருளாதார ஆலோசகர்கள் பேசி வருகிறார்கள். பெரிய தொழிலதிபர்கள், பெரிய  ஏற்றுமதியாளர்களால் தான், நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெருக்கும் என்று கருதப்படுவதால் அவற்றுக்கு உரிய மரியாதைகளுடன் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அடுத்தபடியாக இன்னொரு எச்சரிக்கையையும் துணை கவர்னர் சக்ரவர்த்தி விடுத்திருக்கிறார்.

""வளாக நேர்காணல்கள்'' (கேம்பஸ் இன்டர்வ்யூ) முறை மூலம் கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.

இப்படி நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடம் படிப்பதிலும் அதைத் தெளிவாக விடைத்தாளில் எழுதுவதிலும் மட்டுமே வல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் உலகைப் பற்றிய எதார்த்தமான அறிவோ, அனுபவமோ சிறிதும் இன்றி இருப்பார்கள். அதற்குப் பதிலாக தேர்வாணையங்கள் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்யும்போது மண்ணின் மணத்தோடு நெஞ்சில் உரமும் ஈரமும் உள்ள நல்ல இளைஞர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் மாநிலக் கண்ணோட்டமோ ஜாதி, மத, மொழிக் கண்ணோட்டமோ இருப்பது கூடாது.

இதை வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் வங்கித்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் வேலைக்குத் தேவைப்படுகின்றனர். ஆனால் இதை வங்கிகள் சரியான முறையில், சரியான நபர்களுக்கு கொடுக்குமா? அல்லது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே ""முதலில் (முதலோடு) வந்தவர்களுக்கு முன்னுரிமை'' என்று அளிக்கப்பட்டுவிடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏழை மக்கள் முன்னேற நல்ல திட்டங்களும், அதை செயல் படுத்த நல்ல அதிகாரிகளும் எப்போது கிடைப்பார்கள்?.........    

.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................


 (di)

Wednesday, May 25, 2011

மின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்?


தலைப்பை கண்டு குழம்ப வேண்டாம்... கட்டுரையை படித்து முடித்த பின் உங்களுக்கு புரிந்து விடும்.......

 தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் மிக முக்கியமான தேவையே மின்சாரம் தான். இதை உணர்ந்ததால் தான் காமராஜர் தொலைநோக்கோடு திட்டமிட்டு நெய்வேலி, சென்னை, சமயநல்லூர் அனல் மின் திட்டங்களையும், குந்தா, மோயாறு, பெரியாறு, பரம்பிக்குளம், மேட்டூர் புனல் மின் திட்டங்களையும் நிறைவேற்றி, அக்காலத்திலேயே ஏறத்தாழ அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல முயற்சிகளை செய்தார்.

தமிழ் நாட்டில் உள்ள மின் நிலையங்கள் அப்படி எவ்வளவுதான் உற்பத்தி செய்கிறது?

1951-இல் தமிழகத்தின் மின்தேவை வெறும் 172 மெகாவாட் மின்சாரம் மட்டுமே. ஆனால் இன்று 12000 மெகாவாட் மின்சாரம் தேவைபடுகிறது.  தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 15,800 மெகாவாட் ஆகும். அவற்றின் மூலம் மின்வாரிய மொத்த மின் உற்பத்தி 7000 மெகாவாட் முதல் 8000 மெகாவாட். மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின்சக்தி, சர்க்கரை ஆலை மின் சக்தி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது மூலம் ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரம் ஈடு செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய மின் தேவை 12000 மெகாவாட் மின்சாரம். பற்றாக்குறை மின்சாரம் 1500 முதல் 2000   மெகாவாட்.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டின் கணக்குபடி 18,80,450 பம்ப் செட் இணைப்புகளும், 1,36,61,431 வீட்டு உபயோக இணைப்புகளும் உள்ளன. இவை தவிர தொழிற்சாலை இணைப்புகளும் உள்ளன.
   
தமிழகத்தின் மின் உற்பத்தியானது  4 அனல் மின் நிலையங்கள், 38 நீர் மின் நிலையங்கள், 4  எரிவாயு மின் நிலையங்கள் மூலமாகவும் மற்றும்  மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மற்றும் சர்க்கரை ஆலை மூலம் பெறப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் நெய்வேலி மின் நிலையத்திலிருந்தும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பெறப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் வீட்டு உபயோகத்திற்கு 16%, நிறுவனங்கள், கடைகள் 26%, 4% தெருவிளக்குகளுக்கும், தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரம் 42% மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் 12% பயன்படுத்தபடுகிறது. மின்கசிவு, மின்திருட்டு மூலமும் மின்சக்தி வீணடிக்கப்படுகிறது. மின்கசிவு , மின் திருட்டால் ஏற்படும் இழப்பு மட்டுமே ஏறத்தாழ ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலுள்ள நீர் மின் நிலையங்களில் மூலம் 7,835 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் மின் உற்பத்தி , 2,500 மெகாவாட் மட்டுமே.தமிழ் நாட்டில் உள்ள அனல் நிலையங்கள் மூலம் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 2000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் காற்றாலைகள் மூலம் 4000 மெகாவாட் பெறமுடியும். ஆனால் கிடைப்பது 1500 மெகாவாட் மட்டுமே. தனியாரிடமிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கிட்டதட்ட 1500 முதல் 2000 மெகாவாட் பெறப்படுகிறது.அப்படி இப்படியாக கிட்டதட்ட 10000 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசால் பெறமுடிகிறது.
 
17 ஆண்டுகளாக ஒரு புதிய மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்தவில்லையா?

காமராஜர் ஆட்சி காலம் முதல் 1990 வரையிலும் தமிழகத்தில்  மின்வளர்ச்சி சீராக இருந்து உள்ளது. தமிழகம் உபரி மின்சக்தியைக் கொண்ட மாநிலமாக திகழ்ந்தது. 1992-1993 ஆம் ஆண்டு தமிழக மின் வாரிய வருமானம் ரூ.2500 கோடி. ஆனால் அதன்பின் வந்த எந்த அரசும் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டவுமில்லை, பல திட்டங்கள் இருந்தும் அவற்றை முறையாக செயல்படுத்தவும் இல்லை.

அதன் விளைவு நாம் இன்று நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வீதம் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.18000 கோடி மதிப்பிலான மின்சாரத்தை வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி கொண்டு இருக்கிறோம். தமிழக வருமானத்தில் ஏறத்தாழ 30 சதவீதத் தொகையை தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவதற்காக அரசு செலவழித்து வருகிறது.

1997 ஆம் ஆண்டிலேயே 2010 இல் தமிழகத்தின் மின் தேவை 19500 மெகாவாட் இருக்கும் என கணித்து தமிழக மின் வாரியம் அரசுக்கு அறிக்கை தந்தது. இந்த அறிக்கையை கருத்தில் கொண்டாவது ஏதாவது மின் உற்பத்தி திட்டங்களை முறையாக செயல்படுத்தி இருக்கலாம். இதை விட மின் உற்பத்தி மேம்பாட்டிற்கான நிதியை, தமிழக அரசு  கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1000 கோடியிலிருந்து ரூ.800 கோடியாக குறைத்தது தான். மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற துடிக்கும் அரசு தான் இப்படி செய்யும் அல்லவா?........

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரமும் வாங்குவது ஏன்?

அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் பல இடங்களில் நிலக்கரி கிடைக்கிறது. ஆனால் அவை தரமற்ற நிலக்கரி என்று கூறி, நமது அரசு வெளி நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகிறது.

அதைப்போல் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12 முதல் ரூ.14 வரை கொடுத்து நாளொன்றுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் மின்சாரம் வாங்குகிறது. இதற்கு பதிலாக இந்த பணத்தை கொண்டு நமது சில மின் திட்டங்களை செயல்படுத்தினாலே போதும் பல நூறு மெகாவாட் மின்சாரம் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இவற்றை செய்ய தயக்கம் காட்டுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். ஏதோ ஆதாயம் இருப்பதால் தானே இவர்கள் தயங்குகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது அல்லவா?............. 

மின் வெட்டினால் ஏற்பட்ட பயன் என்ன?

தொடர் மின்தடையின் காரணமாக பொது மக்களும், விவசாயிகளும், தொழிற்சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு நேர் மாறாக மக்களின் அன்றாட பொருட்களின் விலையேற்றமும், பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றமும் மக்களை வாட்டி வதைக்கிறது. விலையேற்றத்தை சமாளிக்க மக்கள் வருமானம் ஈட்ட வேண்டும். ஆனால் இப்படி கடுமையான மின்வெட்டு இருந்தால் எப்படி வருமானம் ஈட்ட முடியும்.

தாறுமாறான மின் வெட்டினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிம்மதியாக படிக்க முடிவதில்லை. நம்ம மாணவர்கள் பெருபாலானோர் தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் தான் படிப்பார்கள். மின்வெட்டு இப்படி கொடுமையாக இருந்தால் பின் எப்படி மாணவர்களின் தேர்வு சதவீதம் அதிகமாகும். இதனால் மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் நாசமாகிறது.   

தமிழ்நாட்டில் உள்ள வெளி நாட்டு தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்குகிறது தமிழக அரசு. இவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.1.60 மட்டுமே. ஆனால் உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.85. மேலும் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் ரூ.700 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அப்படியானால் தமிழகம் முழுவதும் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்...........

கட்டுக்கடங்காத  மின் வெட்டு பிரச்சனைக்காரணமாக மின்வாரிய ஊழியர்களும் சிலவற்றை இழந்தனர். இவர்கள் வழக்கமாக வியாபாரிகளிமிடருந்தும், தொழிற்சாலைகளிமிடருந்தும் தீபாவளிக்கு இனாம் வாங்குவார்கள். அதிக மின் வெட்டின் காரணமாக மக்கள் கடுப்பில் இருந்ததால் கடந்த தீபாவளியில் இனாம் வாங்கமால் கமுக்கமாக இருந்துவிட்டனர்.

2003 ஆம் ஆண்டில் மின்சார சீர்திருத்த சட்டம் உருவாக்கப்பட்டு,தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டம் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்கியது. இதன் மூலம் 7000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் அவை தற்போது 1200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த திட்டங்களையாவது முறையாக செயல்படுத்தி இருந்தால் இப்போது இந்த மின்வெட்டு கொடுமையில் இருந்து தமிழகம் தப்பித்து இருக்கலாம்.


மண்ணை கவ்விய மக்கள் போராட்டம்:

மே மாதம் 4ம் தேதி கோவையில் தமிழகத்தின் கடுமையான மின்வெட்டை கண்டித்து பல்லாயிரம் மக்கள் திரண்ட போராட்டம் நடந்தது. தொழிலாளிகள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்ட கூட்டத்தினால் கோவை நகரமே குலுங்கியது. ஆனால் அப்போது தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்படமால்  இருந்தது. அப்போது தமிழ் நாடு  தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் இருந்ததால் அந்த போராட்டம் வீணாக போனது.
இந்த போராட்டம் முன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன் நடைபெற்றிருந்தால் கூட அப்போதைய அரசுக்கு ஏதாவது பயம் ஏற்பட்டு  மின்வெட்டை குறைக்க வழி எடுத்திருக்கும்.             

ஏதாவது மின் உற்பத்தி திட்டங்கள்  போடபட்டதா?

நீங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு நீண்ட பட்டியலை கீழே காணலாம்.

** வடசென்னை 1200 மெகாவாட் திறன்கொண்ட இரண்டாம் கட்ட முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அனல்மின் நிலைய மின்திட்டங்கள்.

** மேட்டூர் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டம் (நிலை 3).

**  40 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலைய திட்டங்கள்.

** தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகாவாட் அனல் மின் திட்டம்.

** ஜெயங்கொண்டம் மின்வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

** குந்தாவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

** மரபு சாரா எரிசக்தி மூலம் கோயம்பேட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளிலிருந்து 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம். 

** தமிழ் நாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் கரும்பு சக்கையில் இருந்து 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.

** ஆரல்வாய்மொழி, கயத்தாறு, தேனி, உடுமலை ஆகிய, நான்கு இடங்களில், 400 மெகா வாட் சேமிப்புத் திறனுள்ள, ஆறு துணை மின் நிலையங்கள் மின் உற்பத்தி திட்டம்.

இப்படி பல திட்டங்கள் இருந்தும் அவற்றை முறையாக செயல்படுத்த நல்ல அரசும் இல்லை, நல்ல அதிகாரியும் இல்லை.

மின் உற்பத்தியை பெருக்க புதிய வழிகள் ஏதாவது உள்ளதா?


குப்பை கழிவுகள் மூலம் மின் உற்பத்தி:

சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் குவியும் குப்பைகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் குப்பைகளையும் அப்புறப்படுத்தவும் முடியும், மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கும்.

சூரிய மின் சக்தி:

2009 ஆம் ஆண்டு, நவம்பரில் ஜவகர்லால் நேரு  சோலார் மின் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி 2022ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

சூரிய ஒளி மின் திட்டம் மட்டுமே, அனைத்துப் பகுதிகளிலும் செயல் படுத்த முடியும். அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது.சூரிய ஒளி மின் திட்டங்களை செயல்படுத்த காற்றாலையை விட மூன்று மடங்கு செலவு செய்யவேண்டும். ஆனால் இதன்மூலம் வருடம் முழுவதும் ஒருகுறிப்பிட்ட அளவு மின்சாரத்தை நிரந்தரமாக பெற முடியும். மற்ற மின் திட்டங்களை அமைக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் சூரிய மின் திட்டத்தை அமைக்க ஓராண்டுகள் மட்டுமே ஆகும்.

கிராமங்களில் உள்ள ஆடு, மாடுகளின் சாணத்தின் மூலமும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பெற முடியும். 

காவிரிப்படுகையில் கிடைக்கும் 20 லட்சம் கியூபிக் மீட்டர் இயற்கை வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

தமிழ் நாட்டில் திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலை உலகில் உள்ள 42 நாடுகளுக்கு மேல் மின்உற்பத்திக் கருவிகளை தயாரித்து தரும் பெருமை கொண்டது. இவ்வளவு பெருமை கொண்ட நிறுவனத்தை நமது அரசு பயன்படுத்தி மின் உற்பத்தி பெருக்க திட்டம் தீட்டலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய அரசுக்கு எங்கே நேரம் இருக்கிறது?..........

மின்சாரத்தை சேமிக்க  ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

* தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின் சக்தியை குறைத்தால் மக்களுக்கு வழங்கப்படும் ஐந்து சதவீதத்தில் ஒரு சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம்.

* மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. இதை தடுப்பதாலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.

* குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தினால் ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும்.
தெரு விளக்குகளுக்கு சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலமும் மற்ற வகை மின்சாரத்தை சேமிக்கலாம்.

* மின்கசிவு, மின் திருட்டு ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் பல நூறு மெகாவாட் மின்சக்தியை நம்மால் சேமிக்க முடியும்.

* மின் உற்பத்திக்கு எதுவும் செய்யாத இந்த அரசுகள் மின்சாரத்தை சேமிக்க இப்படி பலவழிகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை. மக்களை சேமிக்கவும் ஊக்குவிப்பதும் இல்லை.

* மக்களும் அரசாங்கத்தை மட்டும் குறை கூறிக்கொண்டு மின்சாரத்தை வீணடிக்கக்கூடாது. மின் சக்தியை சேமிக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின் சேமிப்பும் மின் உற்பத்திக்கு ஈடான ஒன்று தானே.....

பொறுப்புள்ள கலெக்டர்?

விளம்பரப் பலகைகளுக்கு தடையற்ற மின்சாரம் தருவது பற்றி கடந்த மாதம் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங்கிடம் கேட்டபோது, தானாகவே குறுக்கிட்ட ஒரு கலெக்டர்  "ஒரு விளம்பரப் பலகையில், 40 வாட்ஸ் பல்பு போடப்படுகிறது; அதனால், பெரிதாக மின்சாரம் செலவாகிவிடாது' என, படு ஆவேசமாகப் பதிலளித்தார். இதுபோன்ற பொறுப்புள்ள அதிகாரிகள் இருந்தால் நம் நாடு அடுத்த ஆண்டே வல்லரசாகிவிடும் அல்லவா..........

அரசு ஏன் மின்உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற தயங்குகிறது?


மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற குறைந்தது ஐந்தாண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். அதற்குள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தின்  காரணமாகவே திமுக, அதிமுக அரசுகள் மின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஓர வஞ்சனை செய்தன.  அதனால் தான் இரு அரசுகளும் குறுகிய கால இலவச திட்டங்களை செயல்படுத்தி மக்களை கவர்ந்து விடலாம் என நினைத்தார்கள். அதன் விளைவு திமுக அரசு கடந்த ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும் சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. திமுக தோல்விக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முதல் கராணமாக இருந்தாலும், இரண்டாம் இடம் பெற்றது
 மின் வெட்டு பிரச்சனை தான்........

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மட்டும் திட்டம் தீட்டுகிறார்களே தவிர, நாட்டுக்காக திட்டமிடுவதில்லை.மக்கள் நலனில் அக்கறை இல்லாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் சில நாடுகளில் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம் நாட்டிலும் கொண்டுவரப்பட்டால் தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.ஆனால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் எந்த ஒரு எம்.எல்.ஏவும், எம்.பியும் 5 ஆண்டுகள் முழுமையாக காலம் தள்ள முடியுமா?.....

புதிய அரசு என்ன செய்ய போகிறது?

தமிழக மின் வாரியத்தில் 60 சதவிகிதம் வரை பணியாளர் பற்றாக்குறை உள்ளது. முதலில் இதை சரி செய்யா வேண்டும்.
புதிய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்திதுவிட்டு வெளியே வந்த உடனேயே தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை விரைவில் தீர்ந்து, தமிழ்நாடு ஒளிமயமாக மாறபோகிறது என பேட்டி கொடுத்தார்.அதற்குகேற்றார் போல் புதிய மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வாநாதனை அறிவித்து, மின் பிரச்சனையை தீர்க்க இரண்டு முறை ஆலோசனை  நடத்தியதாகவும், சூரிய மின்சக்தி மூலம் மின் வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என புதிய அரசு நம்புவதாகவும் செய்திகள் வருகிறது. எப்போதும் ஆரம்பம் நல்லாதான் இருக்கும். ஆனால் முடிவு நல்ல இருந்தால்தான் மக்களின் மின்வெட்டு பிரச்சனை தீரும்.

மேலும் அரசு  மக்களிடம் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதைப்போல்  மின்சேமிப்பிற்கான பொருட்களை பயன்படுத்துவதையும், அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். சூரியசக்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மின்உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு என தனி துறையை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் மின் பற்றாக்குறையை எளிதில் குறைக்கலாம். ஆனால் நமது அரசு இது போன்ற  வெட்டிவேலையை செய்யுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆனால் இந்த அரசும் மின்வெட்டு பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், மேற்குவங்கத்தில் 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்தது போல தமிழ் நாட்டில் 44 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம்............................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................
 


Sunday, May 15, 2011

இந்தியாவில் மாற்றம் வருமா?                         
     இந்தியா ஒரு காலத்தில் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், அறிவியல், உழைப்பு, கற்பு, எந்த நிலையிலும் நீதியை நாட்டுவது என அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தது. மக்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்த நிலையில் தான் இருந்தது. பசி, பட்டினி என்பதும் மிக மிக குறைவு.
    
     அதேபோல் இதே இந்தியா தான் நீதியை நிலை நாட்ட மகனை தேரின் சக்ரத்தால் ஏற்றி கொன்ற மனு நீதி சோழன்,  மயில் குளிரால் வாடிய போது தன் போர்வையை போர்த்திய பேகன் போன்ற உயர்ந்த குணம் கொண்ட மன்னர்களையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறுவை சிகிச்சை விஞ்ஞானியையும், எந்த நோயையும் குணப்படுதும் வல்லமை கொண்ட பல சித்த மருத்துவர்களையும், வான்வெளியை பற்றி நன்கு அறிந்த ஆரியபட்டர் என்ற வானியல் விஞ்ஞானியையும், கணித மேதை பாஸ்கராச்சாரியர் போன்றோரையும் பெற்றிருந்தது. ஆகாய விமானம் தயாரிப்பது பற்றிய குறிப்புகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்துள்ளது.

     மேலும் 1500ஆண்டுகளுக்கு முன்பே தரமான கட்டடம் கட்டும் தொழில்நுட்பம், பெரிய கப்பல் கட்டும் தொழில்நுட்பம், கலைநயம் மிக்க ஆடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பலவகை தொழில்நுட்பத்தையும் பெற்று இருந்தோம்.

     அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்பே  10,000 மாணவர்கள் படித்த  நாளந்தா பல்கலைக்கழகம், 4000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமும், சமஸ்கிருதம், தமிழ் போன்று உலகின் பழமையான செம்மொழிகளையும் பெற்றிருந்த நாடு இது. இதில் சிறப்பு என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதப்பட்டது அநேகமாக நம் தமிழ் மொழிக்கு மட்டுமே. ஆனால் உலகின் பல மொழிகளுக்கு அப்போது எழுத்து வடிவமே கிடையாது.        

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியன், இரண்டே அடியில் மனிதன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் நெறிகளையும் சொன்ன வள்ளுவன், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் போன்ற உலகின் தலை சிறந்த மாமனிதர்கள் வாழ்ந்த நாடு இது.

     1835 இல் மெக்காலே பிரபு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதும் போது, இந்தியாவில் பிச்சைக்காரர்கள், திருடர்களை காண்பது அரிதாக உள்ளது. மேலும் நிறைய செல்வங்களும், வளங்களும் உள்ளது என எழுதி உள்ளார். அதன் பின் தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமையாக்கி  வளங்களை கொள்ளையடித்தார்கள்.

ஆக 200 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நமது இந்தியாவில் செல்வங்கள், வளங்கள் அதிகமாகவும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள்.
 
ஆனால் தற்போதைய இந்தியாவின் நிலை என்ன?

     பல உத்தமர்களும், நீதிமான்களும் வாழ்ந்த இந்த நாட்டில் தான் இப்போது ஊழல் என்பது மிக சாதாரண விஷயமாகவும், கொலை, கொள்ளை, லஞ்சம் என்பது அதை விட  மிக சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொல்லபடுகிறது. தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும். ஆனால் இன்று நேர்மையாக ஒருவர் இருந்தால் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா?

     அக்காலத்தில் 64 ஆயக்கலைகளையும் நன்கு கற்றறிந்தவர்கள்  பலபேர்  இருந்தார்கள். ஆனால் இன்று 64 ஆயக்கலைகளின்  பெயர்களையாவது  தெரிந்தவர்கள் எதனை பேர்? உயர்ந்த நமது பண்பாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் அழிந்து வருகிறது. உலக மக்கள் பலர் நமது பண்பாட்டை உயர்ந்தது என்று கூறும் போது நாம் நம் கலாச்சாரத்தை ஏன் மதிப்பது இல்லை?

பெண்களை தெய்வமாக வணங்கிய இந்த நாட்டில் இப்போது கற்பழிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பெற்ற தந்தையே தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் கொடுமையும் நடக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை மறந்து இன்று கள்ளக்காதல் பெருகி விட்டது. கள்ளக்காதலை காத்துக்கொள்ள பெற்ற தாய் தன் குழந்தையை கூட  கொள்ளும் கொடுமை அதிகமாகி வருகிறது.

     இன்றைய குழைந்தைகளுக்கு பெற்றோர்கள் நமது முன்னோர்களின் வீரம், ஒழுக்கம், பெருமைகள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கே அது தெரியாது, அப்படியே தெரிந்தாலும் சொல்வதும் மிக குறைவு. அதேபோல் கல்விக்கூடங்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

     உலகின் பிற நாடுகளில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்நாடுகளின் அரசும் அதை ஊக்குவிக்க நிறைய நிதி உதவி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அதை பற்றி யாரும் கவலை கொள்வதே கிடையாது. இந்தியாவில் அமையும் அரசுகள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்குவதும் இல்லை, அப்படியே ஒன்று கண்டுபிடித்தாலும் அதை ஊக்குவிப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும், கொள்ளை அடித்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மட்டுமே தான் சிந்திக்கிறார்கள்.

     நமது கல்வி முறையும் மனப்பாடம் செய்து எழுதுவதையே ஊக்குவிக்கிறது. பிற நாட்டில் உள்ளது போல் செயல்முறை கல்வி இங்கு இல்லாததும் ஒரு காரணம். மாணவர்கள் சிந்தனையை துண்டும்  விதமாகவும் , புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பாதாகவும் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
  
     சினிமாவும், கிரிக்கெட்டும் நமது நாட்டின் இரண்டு கண்களை போல் ஆகிவிட்டது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற உதவி செய்பவர்கள் எத்தனை பேர்? இவ்வளவு சம்பாதிக்கும் இவர்களுக்கு வரி கட்டுவதில் இருந்து கூட விலக்கு அளிக்கப்படுகிறது. மக்கள் உயிரை காப்பாற்ற தன் உயிரைவிட்ட இராணுவ வீரர்களுக்கு கிடைக்கின்ற மதிப்பை விட இவர்களுக்கே புகழும், மதிப்பும், பெருமையும் அதிகம். 

சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்று கூறிக்கொண்டு அதிக ஆபாசம் காட்டப்படுகிறது. இன்றைய படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே சொல்லப்படுகிறது. அதிலும் இளம் பருவத்தில் உள்ள ஒரு ஆண், பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் எப்படி கல்யாணத்தில் முடிகிறது”, காதலை எப்படி வித விதமாக செய்வது என்ற கதையை கொண்ட சினிமாபடங்களே அதிகம். இந்த மாதிரியான கதை கொண்ட சினிமா படங்கள் நாட்டிற்கும், நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை உயர வழி வகுக்குமா?.

இளம்பருவத்தில் ஏற்படும் காதல் மட்டும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமா? சினிமாவில் காட்டப்படும் இது போன்ற கதைகளால் நம்ம இளைஞர்களும் அவர்களின் திஉன்னதமான இளமை பருவத்தை பாழ்படுத்திக்கொள்வதோடு, நாட்டின் கலாச்சாரத்தையும் சீரழிக்கிறார்கள்.

அதேபோல் பெண்களுக்கு சம உரிமை என்பதும் இன்னும் ஒரு சொல்லாக மட்டுமே உள்ளது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் தோற்றத்தின் அழகை எப்படி கூட்டுவது? அழகாக எப்படி ஆடை அணிவது? என்பதை பற்றி சிந்திப்பதே அதிகம்.  

இன்றைய பெண்களில் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எத்தனை பேர்? தங்களின் திறமையையும், அறிவையும் நிரூபித்தவர்கள் மிக குறைவு. தினசரி பத்திரிக்கைகளை படிக்கும் பெண்களும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் பார்ப்பவர்களும் எத்தனை பேர்? ஆனால் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் சொல்லித்தான்  உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.

அரசியல் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஜாதி, மதங்களை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொன்று நாட்டில் மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். இன்றைக்கு தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பெரும்பாலும் அதிக பணம் கொண்டவர்களாகவும், அதிக குற்ற வழக்குகள் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அரசியல்வாதியாக வரும்போது ஏழைகள் பற்றியும்,நாட்டில் குற்றங்கள் குறைய புதிய வழிமுறைகள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்.

இந்தியாவில் மாற்றம் வர வேண்டும் எனில் அதற்கு மக்களாகிய நீங்கள் மனது வைக்க வேண்டும். மாற்றத்தை விரும்பி ஏற்க வேண்டும். அரசியலில் மாற்றம் நிகழ இந்திய மக்கள் ஒன்று திரண்டு அமைதியான முறையில் போராட வேண்டும். அமைதியான அறப்போராட்டாமே  என்றும் வெல்லும். ஆனால் இந்த மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி போராடும் மகாத்மா காந்தி போன்ற ஒரு தன்னலமற்ற தலைமை கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

...............................................................................................