Saturday, August 11, 2012

தேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்?

2012 ஜூலை 20-ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் 144.59 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வேறெந்த பயிர் சாகுபடியைக் காட்டிலும் அதிகம்.மேலும் சென்ற ஆண்டு உற்பத்தியில்  ஏற்றுமதி போக, மிச்சமாக இருக்கும் அரிசி 33 மில்லியன் டன்!

மழையின்மை, அல்லது அணையில் நீர் இல்லை என்பதால் நெல்சாகுபடி பாதிக்கப்பட்டாலும்கூட, நிச்சயமாக 100 மில்லியன் டன் அரிசி உற்பத்தி நிச்சயம். கையிருப்பு 33 மில்லியன் டன். ஆக, இந்த ஆண்டு இந்திய மக்களுக்கு 133 மில்லியன் டன் அரிசி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய மக்கள் பயன்படுத்தும் அரிசி அளவு 95 மில்லியன் டன் மட்டுமே. அப்படி இருக்கும்போது, அரிசிவிலை கடந்த 3 மாதங்களில் கடுமையாக உயர்ந்துகொண்டே போவது ஏன் என்பதுதான் புரியவில்லை.

மொத்தக் கொள்முதலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஒரு மூட்டை பொன்னி அரிசி (75 கிலோ) ரூ.2,100 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.500 கூடியிருக்கிறது. அதாவது ரூ.2,600. இந்த அரிசி 25 கிலோ சிப்பமாகக் கடைகளுக்கு வரும்போது அதன் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளது.

இதேபோன்று, மோட்டா ரகம் அல்லது இட்லி அரிசி விலை கடந்த 6 ஆண்டுகளாக அதிக வித்தியாசம் இல்லாமல் ஒரே அளவாக இருந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம் இட்லி அரிசிக்கு இப்போது ஏன் நேர்ந்தது? 

இந்தக் கேள்விக்கு அரிசி மொத்த விற்பனையாளர்கள் சொல்லும் பதில் ஆச்சரியத்தைத் தருகிறது: ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பில் அரசின் கண்காணிப்பு அதிகமாகிவிட்டது. கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இட்லி அரிசி விலை அதிகரித்துவிட்டது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ரேஷன் அரிசி பெரும்பாலும் பாலிஷ் போட்டு உள்ளூர் சந்தைக்கே திரும்பி வந்ததாகவும், அதனால் விலை உயராமல் இருந்தது என்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால், இந்த வாதமும் ஏற்புடையதாகவே இல்லை. அரசு 20 கிலோ ரேஷன் அரிசியை விநியோகித்தாலும் அதைப் பெறும் குடும்பங்கள் 50 விழுக்காடு மட்டுமாகவே இருக்கும். இவர்களும்கூட, ரேஷன் அரிசி பாதி, இட்லி அரிசி பாதி என்ற அளவில் ஊற வைத்து, மாவு அரைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஆக, இவர்கள் சொல்லும் கடத்தல் தடுப்பு கெடுபிடி எல்லாம் வெறும் கண்துடைப்பு வாதங்கள்.

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் தள்ளுவண்டிக் கடைகளில் ஒரு இட்லி ரூ.2.50 அல்லது ரூ. 3-க்கு விற்பனை செய்ய இயலுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ரேஷன் அரிசிதான். அரசு தரும் இலவச அரிசிதான் தள்ளுவண்டி இட்லி விலை உயர்வைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. 

சர்வதேசச் சந்தையில், தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இதில் இந்தியாவைப் பொருத்தவரை பாசுமதி அரிசிதான் முக்கியப் பங்கு வகித்தது. கடந்த சில ஆண்டுகளாக சாதாரண பொன்னி ரக அரிசி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 7 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் 4.5 மில்லியன் டன் பாசுமதி அல்லாத ரகம்! 

தாய்லாந்து அரிசி விலையைக் காட்டிலும் 100 டாலர் குறைவாக விற்க  இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் தயாராக இருப்பதால், சர்வதேச அரிசிச் சந்தையில் இந்தியா இந்த ஆண்டு கூடுதலாக 2 மில்லியன் டன் அரிசி விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

ஒருவேளை, ஏற்றுமதிக்குத் திருப்பிவிடப்படுவதால் விலை உயர்கிறதா அல்லது பருவமழை பொய்க்கும் என்ற பீதியைப் பயன்படுத்திக்கொண்டு விலையை உயர்த்துகிறார்களா என்பது தெரியவில்லை. போதுமான அரிசி இருப்பில் இருக்கும்போது, தட்டுப்பாடு இல்லாத நிலையில் ஏன் இந்த அளவுக்கு விலை உயர வேண்டும்?

ஒன்றுமட்டும் புரிகிறது. இந்த அரிசி விலை உயர்வு எல்லா குடும்பங்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் விலை அதிகரிக்கும் என்ற பீதியில், கூடுதலாக ஒரு சிப்பம் சேர்த்து வாங்கி, சந்தையில் தேவையில்லாத விலை உயர்வுக்குத் தாங்களே ஒரு காரணமாகி விடுகிறார்கள்.

தற்போது நெல் கொள்முதல் விலை குவிண்டால் ரூ.1,250 என மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்தக் கொள்முதல் விலை முந்தைய ஆதார விலையைக் காட்டிலும் 16% அதிகம். 75 கிலோ நெல், அரிசியாக மதிப்பூட்டப்படும்போது அதன் விலை தோராயமாக ரூ.1,200 ஆகத்தான் இருக்கிறது. ஆனால், சந்தையில் இது 100% அதிக லாபத்துக்கு விற்பனையாகிறது.

உழுது விதைத்து அறுத்தவனுக்குக் கிடைத்தாலும்கூட, இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிலைமை அதுவாக இல்லையே. இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் அல்லவா கொழிக்கிறார்கள். அரிசி, வாழ்வின் இன்றியமையா உணவு தானியம். அதை மக்கள் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்தால் விலையும் குறைவாக  இருக்கும், விவசாயிக்கும் நல்ல  கூலி  கிடைக்கும்.
  

.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................நன்றி: தின மணி