Sunday, May 15, 2011

இந்தியாவில் மாற்றம் வருமா?



                         
     இந்தியா ஒரு காலத்தில் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், அறிவியல், உழைப்பு, கற்பு, எந்த நிலையிலும் நீதியை நாட்டுவது என அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தது. மக்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்த நிலையில் தான் இருந்தது. பசி, பட்டினி என்பதும் மிக மிக குறைவு.
    
     அதேபோல் இதே இந்தியா தான் நீதியை நிலை நாட்ட மகனை தேரின் சக்ரத்தால் ஏற்றி கொன்ற மனு நீதி சோழன்,  மயில் குளிரால் வாடிய போது தன் போர்வையை போர்த்திய பேகன் போன்ற உயர்ந்த குணம் கொண்ட மன்னர்களையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறுவை சிகிச்சை விஞ்ஞானியையும், எந்த நோயையும் குணப்படுதும் வல்லமை கொண்ட பல சித்த மருத்துவர்களையும், வான்வெளியை பற்றி நன்கு அறிந்த ஆரியபட்டர் என்ற வானியல் விஞ்ஞானியையும், கணித மேதை பாஸ்கராச்சாரியர் போன்றோரையும் பெற்றிருந்தது. ஆகாய விமானம் தயாரிப்பது பற்றிய குறிப்புகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்துள்ளது.

     மேலும் 1500ஆண்டுகளுக்கு முன்பே தரமான கட்டடம் கட்டும் தொழில்நுட்பம், பெரிய கப்பல் கட்டும் தொழில்நுட்பம், கலைநயம் மிக்க ஆடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பலவகை தொழில்நுட்பத்தையும் பெற்று இருந்தோம்.

     அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்பே  10,000 மாணவர்கள் படித்த  நாளந்தா பல்கலைக்கழகம், 4000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமும், சமஸ்கிருதம், தமிழ் போன்று உலகின் பழமையான செம்மொழிகளையும் பெற்றிருந்த நாடு இது. இதில் சிறப்பு என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதப்பட்டது அநேகமாக நம் தமிழ் மொழிக்கு மட்டுமே. ஆனால் உலகின் பல மொழிகளுக்கு அப்போது எழுத்து வடிவமே கிடையாது.        

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியன், இரண்டே அடியில் மனிதன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் நெறிகளையும் சொன்ன வள்ளுவன், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் போன்ற உலகின் தலை சிறந்த மாமனிதர்கள் வாழ்ந்த நாடு இது.

     1835 இல் மெக்காலே பிரபு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதும் போது, இந்தியாவில் பிச்சைக்காரர்கள், திருடர்களை காண்பது அரிதாக உள்ளது. மேலும் நிறைய செல்வங்களும், வளங்களும் உள்ளது என எழுதி உள்ளார். அதன் பின் தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமையாக்கி  வளங்களை கொள்ளையடித்தார்கள்.

ஆக 200 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நமது இந்தியாவில் செல்வங்கள், வளங்கள் அதிகமாகவும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள்.
 
ஆனால் தற்போதைய இந்தியாவின் நிலை என்ன?

     பல உத்தமர்களும், நீதிமான்களும் வாழ்ந்த இந்த நாட்டில் தான் இப்போது ஊழல் என்பது மிக சாதாரண விஷயமாகவும், கொலை, கொள்ளை, லஞ்சம் என்பது அதை விட  மிக சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொல்லபடுகிறது. தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும். ஆனால் இன்று நேர்மையாக ஒருவர் இருந்தால் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா?

     அக்காலத்தில் 64 ஆயக்கலைகளையும் நன்கு கற்றறிந்தவர்கள்  பலபேர்  இருந்தார்கள். ஆனால் இன்று 64 ஆயக்கலைகளின்  பெயர்களையாவது  தெரிந்தவர்கள் எதனை பேர்? உயர்ந்த நமது பண்பாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் அழிந்து வருகிறது. உலக மக்கள் பலர் நமது பண்பாட்டை உயர்ந்தது என்று கூறும் போது நாம் நம் கலாச்சாரத்தை ஏன் மதிப்பது இல்லை?

பெண்களை தெய்வமாக வணங்கிய இந்த நாட்டில் இப்போது கற்பழிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பெற்ற தந்தையே தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் கொடுமையும் நடக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை மறந்து இன்று கள்ளக்காதல் பெருகி விட்டது. கள்ளக்காதலை காத்துக்கொள்ள பெற்ற தாய் தன் குழந்தையை கூட  கொள்ளும் கொடுமை அதிகமாகி வருகிறது.

     இன்றைய குழைந்தைகளுக்கு பெற்றோர்கள் நமது முன்னோர்களின் வீரம், ஒழுக்கம், பெருமைகள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கே அது தெரியாது, அப்படியே தெரிந்தாலும் சொல்வதும் மிக குறைவு. அதேபோல் கல்விக்கூடங்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

     உலகின் பிற நாடுகளில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்நாடுகளின் அரசும் அதை ஊக்குவிக்க நிறைய நிதி உதவி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அதை பற்றி யாரும் கவலை கொள்வதே கிடையாது. இந்தியாவில் அமையும் அரசுகள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்குவதும் இல்லை, அப்படியே ஒன்று கண்டுபிடித்தாலும் அதை ஊக்குவிப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும், கொள்ளை அடித்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மட்டுமே தான் சிந்திக்கிறார்கள்.

     நமது கல்வி முறையும் மனப்பாடம் செய்து எழுதுவதையே ஊக்குவிக்கிறது. பிற நாட்டில் உள்ளது போல் செயல்முறை கல்வி இங்கு இல்லாததும் ஒரு காரணம். மாணவர்கள் சிந்தனையை துண்டும்  விதமாகவும் , புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பாதாகவும் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும்.
  
     சினிமாவும், கிரிக்கெட்டும் நமது நாட்டின் இரண்டு கண்களை போல் ஆகிவிட்டது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற உதவி செய்பவர்கள் எத்தனை பேர்? இவ்வளவு சம்பாதிக்கும் இவர்களுக்கு வரி கட்டுவதில் இருந்து கூட விலக்கு அளிக்கப்படுகிறது. மக்கள் உயிரை காப்பாற்ற தன் உயிரைவிட்ட இராணுவ வீரர்களுக்கு கிடைக்கின்ற மதிப்பை விட இவர்களுக்கே புகழும், மதிப்பும், பெருமையும் அதிகம். 

சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்று கூறிக்கொண்டு அதிக ஆபாசம் காட்டப்படுகிறது. இன்றைய படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே சொல்லப்படுகிறது. அதிலும் இளம் பருவத்தில் உள்ள ஒரு ஆண், பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் எப்படி கல்யாணத்தில் முடிகிறது”, காதலை எப்படி வித விதமாக செய்வது என்ற கதையை கொண்ட சினிமாபடங்களே அதிகம். இந்த மாதிரியான கதை கொண்ட சினிமா படங்கள் நாட்டிற்கும், நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை உயர வழி வகுக்குமா?.

இளம்பருவத்தில் ஏற்படும் காதல் மட்டும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமா? சினிமாவில் காட்டப்படும் இது போன்ற கதைகளால் நம்ம இளைஞர்களும் அவர்களின் திஉன்னதமான இளமை பருவத்தை பாழ்படுத்திக்கொள்வதோடு, நாட்டின் கலாச்சாரத்தையும் சீரழிக்கிறார்கள்.

அதேபோல் பெண்களுக்கு சம உரிமை என்பதும் இன்னும் ஒரு சொல்லாக மட்டுமே உள்ளது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் தோற்றத்தின் அழகை எப்படி கூட்டுவது? அழகாக எப்படி ஆடை அணிவது? என்பதை பற்றி சிந்திப்பதே அதிகம்.  

இன்றைய பெண்களில் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எத்தனை பேர்? தங்களின் திறமையையும், அறிவையும் நிரூபித்தவர்கள் மிக குறைவு. தினசரி பத்திரிக்கைகளை படிக்கும் பெண்களும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் பார்ப்பவர்களும் எத்தனை பேர்? ஆனால் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் சொல்லித்தான்  உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.

அரசியல் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஜாதி, மதங்களை ஒழிக்கின்றோம் என்று கூறிக்கொன்று நாட்டில் மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். இன்றைக்கு தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பெரும்பாலும் அதிக பணம் கொண்டவர்களாகவும், அதிக குற்ற வழக்குகள் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அரசியல்வாதியாக வரும்போது ஏழைகள் பற்றியும்,நாட்டில் குற்றங்கள் குறைய புதிய வழிமுறைகள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்.

இந்தியாவில் மாற்றம் வர வேண்டும் எனில் அதற்கு மக்களாகிய நீங்கள் மனது வைக்க வேண்டும். மாற்றத்தை விரும்பி ஏற்க வேண்டும். அரசியலில் மாற்றம் நிகழ இந்திய மக்கள் ஒன்று திரண்டு அமைதியான முறையில் போராட வேண்டும். அமைதியான அறப்போராட்டாமே  என்றும் வெல்லும். ஆனால் இந்த மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி போராடும் மகாத்மா காந்தி போன்ற ஒரு தன்னலமற்ற தலைமை கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.




மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

...............................................................................................



                            

1 comment:

  1. சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தன்னலமின்மை அனைவருக்கும் வர வேண்டும். ஒவ்வொறு தனிமனிதனும் மாறினால் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete