Sunday, June 5, 2011

4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......


பணக்காரர்கள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஏழைகள் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் இக்கால அரசியல்வாதிகள், அதிகாரிகள் மத்தியில், சாமானிய ஏழை மக்கள், கிராமப்புற விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பற்றியும் சிந்திக்கும் சிலர் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்படி சொல்ல காரணம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சொன்ன சில கருத்துகள்தான்.

""வங்கிகள் தங்களுடைய கடன் பிரிவுக்கு சிறப்பு மேலாண்மைக் கல்லூரிகளில் (பிசினஸ் ஸ்கூல்) எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகளையே பணிக்கு அமர்த்துவது சரியல்ல'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே. சக்ரவர்த்தி.

அதற்கு அவர் கூறியிருக்கும் காரணமும் மிகவும் பொருத்தமானது.

பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்திலிருந்தே கான்வென்டில் படித்து வளர்ந்த மத்திய தர அல்லது பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் இந்தப் படிப்பை முடித்து வேலைக்கு வருகிறார்கள்.

இது போன்று வேலைக்கும் வரும் மாணவர்களுக்கு, நேர்மையையும், நாணயத்தையும் தங்களது உழைப்பையும் நம்பும் சாமானியத் தொழிலாளர்கள், விவசாயிகள் பற்றிய வாழ்க்கை முறைகளும், தேவைகளும் தெரிவதில்லை. வங்கிகளில் கடனுக்காக அவர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்து அவர்கள் மீது சந்தேகப்பட்டு கடன் வழங்க மறுத்துவிடுகின்றனர் அல்லது ஜாமீன் கேட்கின்றனர்.

ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மிகவும் கெடுபிடியாக வசூல் செய்து நோகடித்துவிடுகிறார்கள்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள் கடன் ரத்துக்கு தனித்தனியாக விண்ணப்பித்து நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக, தங்களுடைய கடன் பிரச்னையை இந்த தேசத்தின் தொழில்துறைக்கே நேர்ந்துவிட்ட மிகப்பெரிய சோதனையாகச் சித்திரித்து விடுகிறார்கள்.

இந்த நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக தொழிலதிபர்கள் வாங்கிய கடன்களை வசூலிக்காமல் நிறுத்தி வைக்கவும், வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்யவும், மேற்கொண்டு தொழில் செய்ய முதலீட்டு ஊக்குவிப்பு வழங்கவும் மற்றும் தனி மானியம் போன்றவற்றை வழங்கவும் பரிந்துரை செய்யவைத்து கோடானு கோடி ரூபாயை ""காந்தி கணக்கில்'' எழுதிவிடுகிறார்கள்.

நம் நாட்டில் தொழில், வர்த்தகத் துறைகளுக்கு பட்ஜெட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகளை கொடுக்கிறார்கள்.

ஆனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், புதிய தலைமுறை தொழில் முனைவோர்கள் வாங்கும் கடன்கள் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கான கடன்களாகவே கருதப்படுகின்றன. எனவே கடன் சுமையைக் குறைக்கவோ, தள்ளுபடி செய்யவோ ""அருகதையற்ற தண்டச் செலவுகளாகவே'' அவற்றைக் கருதுகின்றனர்.

மானியங்களால்தான் இந்த நாட்டின் செல்வமே கொள்ளைபோகின்றன என்று சில பொருளாதார ஆலோசகர்கள் பேசி வருகிறார்கள். பெரிய தொழிலதிபர்கள், பெரிய  ஏற்றுமதியாளர்களால் தான், நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெருக்கும் என்று கருதப்படுவதால் அவற்றுக்கு உரிய மரியாதைகளுடன் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அடுத்தபடியாக இன்னொரு எச்சரிக்கையையும் துணை கவர்னர் சக்ரவர்த்தி விடுத்திருக்கிறார்.

""வளாக நேர்காணல்கள்'' (கேம்பஸ் இன்டர்வ்யூ) முறை மூலம் கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.

இப்படி நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடம் படிப்பதிலும் அதைத் தெளிவாக விடைத்தாளில் எழுதுவதிலும் மட்டுமே வல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் உலகைப் பற்றிய எதார்த்தமான அறிவோ, அனுபவமோ சிறிதும் இன்றி இருப்பார்கள். அதற்குப் பதிலாக தேர்வாணையங்கள் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்யும்போது மண்ணின் மணத்தோடு நெஞ்சில் உரமும் ஈரமும் உள்ள நல்ல இளைஞர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் மாநிலக் கண்ணோட்டமோ ஜாதி, மத, மொழிக் கண்ணோட்டமோ இருப்பது கூடாது.

இதை வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் வங்கித்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் வேலைக்குத் தேவைப்படுகின்றனர். ஆனால் இதை வங்கிகள் சரியான முறையில், சரியான நபர்களுக்கு கொடுக்குமா? அல்லது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே ""முதலில் (முதலோடு) வந்தவர்களுக்கு முன்னுரிமை'' என்று அளிக்கப்பட்டுவிடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏழை மக்கள் முன்னேற நல்ல திட்டங்களும், அதை செயல் படுத்த நல்ல அதிகாரிகளும் எப்போது கிடைப்பார்கள்?.........    

.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................


 (di)

No comments:

Post a Comment