Saturday, July 2, 2011

கல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்?

முனிவர்களும் ஞானிகளும் மாணவர்களைத் தங்களது குழந்தைகளாக நினைத்து, தங்களோடு வைத்து உணவு, உடை, உறையுள் அனைத்தும் தந்து, கல்வி கற்று கொடுத்த நாடு இது.

"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்றாள் அவ்வைப் பெருமாட்டியும்,

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது அதிவீரராமபாண்டினின் வெற்றிவேட்கை என்கிற நீதிநூல்.

மூன்று கல் தொலைவுக்கு ஒரு கல்விக்கூடம் என்று கொண்டு வந்த கல்விகண் திறந்த காமராஜ் முதன்முதலாக மாணவர்களிடம் சொன்னது இதுதான்

"பிள்ளைகளா, பிச்சை எடுத்தாவது படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கன்னேன். நான் சொல்லுதேன்; நீங்க போயிப் பள்ளிக்கூடத்திலே படிங்க. நான் போயி உங்களுக்காகப் பிச்சை எடுக்கேன்னார்.''

அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் மாநாட்டில் பேசும்போது அவர் சொன்னது, ''ஏழைப் பிள்ளைகள் நல்லா சொல்லிக் கொடுங்கய்யா, ஏமாத்திறாதீங்க. படிக்க வச்சிட்டீங்கன்னா பொழச்சுக்கிடுவாம்ய்யா''. ஒருநேரம் சோறு போட்டாவது ஏழைகளைப் பள்ளிக்கு வர வைக்க ஏற்பாடு செய்தார்.

1963-ல் தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர். காமராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, "காமராஜ் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி' என்றார். அதனால்தான் எம்.ஜி.ஆர். காமராஜின் மதிய உணவை சத்துணவு ஆக்கினார்.

1980 சட்டப்பேரவைத் தேர்தலிலே பேசிஎம்.ஜி.ஆர், கும்பகோணத்திலே எங்கள் தாய், வீடுகளிலே பத்துப் பாத்திரம் தேய்த்து என்னையும் என் அண்ணனையும் காப்பாற்றினார். வேலைக்குப் போகும் நேரங்களிலே என்னையும் என்னுடைய அண்ணனையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவார். காரணம், பசியில் நாங்கள் பக்கத்து வீட்டில்போய் கையேந்திவிடக் கூடாது என்று சொன்னார். மேடைகளிலே தனது உண்மை வாழ்க்கையை எம்.ஜி.ஆர். சொன்னார். அதனால்தான் சோறு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். சத்துணவை அதனால்தான் போட்டேன் என்றார்.

அவர்கள் எல்லோரும் கல்வியில் அக்கறை காட்டியதற்குக் காரணம், அவர்களுக்கு கிடைக்காத அந்த சரியான கல்வி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் எண்ணத்தில் தான். அந்தக் கல்வியின் நிலைமை இன்று என்ன?

அரசுப் பள்ளிக்கூடங்களிலும், மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களிலும் மாநிலத்திலேயே மாணவர்களும் மாணவிகளும் முதலாவதாக வருகிறார்கள் ஆனால், அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களும்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களிலே சேர்க்கின்றனர்.

நடுத்தர மக்களும் தங்கள் நிலைபுரியாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளிலே தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுக் கட்டணம் கட்ட முடியாமல் அவமானப்படுகின்றனர்.

இதன் காரணமாகதான் மேட்டுப்பாளையத்தில் ஒரு தாய், கேவலம் யு.கே.ஜி. படிக்கிற தன் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

முதலில் அரசு செய்ய வேண்டியது அரசுப் பள்ளிக்கூடங்கள் பெற்றிருக்கிற தேர்ச்சியை விளம்பரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் எல்லாப் பிரிவினரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கூடத்தில் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
 
கொள்ளையும் அடித்துவிட்டு, கல்வித் தந்தை, கல்வி வள்ளல், கல்விக் கடவுள் என்று பட்டம் போட்டுக் கொள்கிறவர்களைத் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

நான்கு, ஐந்து ஆண்டுகளிலே கல்விச்சாலைகளை அமைத்தவர்கள் கோடீஸ்வரர்களாக வலம் வருகிற கொடுமையைத் தடுத்தேயாக வேண்டும். இன்னொரு கொடுமை, ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிவிட்டாலே போதும், பாதிப் பேர் கல்வி வணிகர்களாகி விடுகின்றனர்.

காந்தியடிகள் படத்தையும் காமராஜ் படத்தையும் போட்டுப் பிழைப்பு நடத்துகிற கல்விக் கொள்ளையர்கள், எல்லோருக்கும் கல்வி அளிக்க ஆணையிட்ட காமராஜ், எம்.ஜி.ஆர் படங்களையோ, சிலைகளையோ தொடக்கூடத் தகுதியற்றவர்கள்.

அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று மூன்று பிரிவுகளாகக் கல்விச்சாலைகள் செயல்படுகின்றன. ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றும், வசதி படைத்தவர்களுக்குத்தான் தனியார் பள்ளிகள் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பணம் படைத்திருந்தால் நல்ல கல்வி, ஆங்கிலக் கல்வி என்றும், பணம் இல்லாத ஏழைகளுக்கு அரசுப்பள்ளி என்பதும் சமத்துவ, சமதர்ம சமுதாயம் என்கிற தத்துவத்தையே கேலி செய்வதாக அல்லவா இருக்கிறது?

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் அதிகச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலோனோர் சிறப்பான கல்வி மாணவர்களுக்கு கற்றுத் ருவதில்லை.

தனியார் பள்ளிகளில், தரமான கல்வி என்கிற பெயரில் பெற்றோர்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை கேள்விகேட்க ஆளில்லை என்கிற நிலைமைதான் உள்ளது.தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. அரசுதானே பெற்றோர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, இதைத்தடுக்க ஏதாவது வழிகள் செய்ய வேண்டும்.


கல்விதான் கட்டாயம் இலவசமாகத் தரப்பட வேண்டியது. அதனால் அரசு அதை இலவசமாகத் தருவதற்கு முயல வேண்டும், மற்ற இலவசங்களைப் புறந்தள்ள வேண்டும். மக்கள் வருத்தம் கொள்ள மாட்டார்கள்.

அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமே முக்கியமல்ல. அனைவருக்கும் தரமான கல்வி என்பதும், இலவசக் கல்வி என்பதும்கூட முக்கியம். ஆனால், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தரமான கல்வி தரப்படாது என்று, அந்த குழந்தைக்கு தரமான கல்வி மறுக்கப்படுவது அநியாயத்திலும் அநியாயமல்லவா?
.
.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

.................................................................... 

(di)