Sunday, November 25, 2012

ஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வு எங்கே போனது?

இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.

அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.

இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.

இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!

8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.

ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?

ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது.

தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?

 இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகளை  கருதி, கல்வி துறையில் உள்ள குறைகளை  தீர்க்க தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.

பள்ளி வாராக் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது . ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.

 நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

 கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால், நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்!






.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)

Saturday, August 11, 2012

தேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்?

2012 ஜூலை 20-ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் 144.59 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வேறெந்த பயிர் சாகுபடியைக் காட்டிலும் அதிகம்.மேலும் சென்ற ஆண்டு உற்பத்தியில்  ஏற்றுமதி போக, மிச்சமாக இருக்கும் அரிசி 33 மில்லியன் டன்!

மழையின்மை, அல்லது அணையில் நீர் இல்லை என்பதால் நெல்சாகுபடி பாதிக்கப்பட்டாலும்கூட, நிச்சயமாக 100 மில்லியன் டன் அரிசி உற்பத்தி நிச்சயம். கையிருப்பு 33 மில்லியன் டன். ஆக, இந்த ஆண்டு இந்திய மக்களுக்கு 133 மில்லியன் டன் அரிசி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய மக்கள் பயன்படுத்தும் அரிசி அளவு 95 மில்லியன் டன் மட்டுமே. அப்படி இருக்கும்போது, அரிசிவிலை கடந்த 3 மாதங்களில் கடுமையாக உயர்ந்துகொண்டே போவது ஏன் என்பதுதான் புரியவில்லை.

மொத்தக் கொள்முதலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஒரு மூட்டை பொன்னி அரிசி (75 கிலோ) ரூ.2,100 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.500 கூடியிருக்கிறது. அதாவது ரூ.2,600. இந்த அரிசி 25 கிலோ சிப்பமாகக் கடைகளுக்கு வரும்போது அதன் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளது.

இதேபோன்று, மோட்டா ரகம் அல்லது இட்லி அரிசி விலை கடந்த 6 ஆண்டுகளாக அதிக வித்தியாசம் இல்லாமல் ஒரே அளவாக இருந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம் இட்லி அரிசிக்கு இப்போது ஏன் நேர்ந்தது? 

இந்தக் கேள்விக்கு அரிசி மொத்த விற்பனையாளர்கள் சொல்லும் பதில் ஆச்சரியத்தைத் தருகிறது: ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பில் அரசின் கண்காணிப்பு அதிகமாகிவிட்டது. கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இட்லி அரிசி விலை அதிகரித்துவிட்டது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ரேஷன் அரிசி பெரும்பாலும் பாலிஷ் போட்டு உள்ளூர் சந்தைக்கே திரும்பி வந்ததாகவும், அதனால் விலை உயராமல் இருந்தது என்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆனால், இந்த வாதமும் ஏற்புடையதாகவே இல்லை. அரசு 20 கிலோ ரேஷன் அரிசியை விநியோகித்தாலும் அதைப் பெறும் குடும்பங்கள் 50 விழுக்காடு மட்டுமாகவே இருக்கும். இவர்களும்கூட, ரேஷன் அரிசி பாதி, இட்லி அரிசி பாதி என்ற அளவில் ஊற வைத்து, மாவு அரைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஆக, இவர்கள் சொல்லும் கடத்தல் தடுப்பு கெடுபிடி எல்லாம் வெறும் கண்துடைப்பு வாதங்கள்.

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் தள்ளுவண்டிக் கடைகளில் ஒரு இட்லி ரூ.2.50 அல்லது ரூ. 3-க்கு விற்பனை செய்ய இயலுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ரேஷன் அரிசிதான். அரசு தரும் இலவச அரிசிதான் தள்ளுவண்டி இட்லி விலை உயர்வைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. 

சர்வதேசச் சந்தையில், தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள்தான் அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இதில் இந்தியாவைப் பொருத்தவரை பாசுமதி அரிசிதான் முக்கியப் பங்கு வகித்தது. கடந்த சில ஆண்டுகளாக சாதாரண பொன்னி ரக அரிசி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 7 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் 4.5 மில்லியன் டன் பாசுமதி அல்லாத ரகம்! 

தாய்லாந்து அரிசி விலையைக் காட்டிலும் 100 டாலர் குறைவாக விற்க  இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் தயாராக இருப்பதால், சர்வதேச அரிசிச் சந்தையில் இந்தியா இந்த ஆண்டு கூடுதலாக 2 மில்லியன் டன் அரிசி விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

ஒருவேளை, ஏற்றுமதிக்குத் திருப்பிவிடப்படுவதால் விலை உயர்கிறதா அல்லது பருவமழை பொய்க்கும் என்ற பீதியைப் பயன்படுத்திக்கொண்டு விலையை உயர்த்துகிறார்களா என்பது தெரியவில்லை. போதுமான அரிசி இருப்பில் இருக்கும்போது, தட்டுப்பாடு இல்லாத நிலையில் ஏன் இந்த அளவுக்கு விலை உயர வேண்டும்?

ஒன்றுமட்டும் புரிகிறது. இந்த அரிசி விலை உயர்வு எல்லா குடும்பங்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் விலை அதிகரிக்கும் என்ற பீதியில், கூடுதலாக ஒரு சிப்பம் சேர்த்து வாங்கி, சந்தையில் தேவையில்லாத விலை உயர்வுக்குத் தாங்களே ஒரு காரணமாகி விடுகிறார்கள்.

தற்போது நெல் கொள்முதல் விலை குவிண்டால் ரூ.1,250 என மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்தக் கொள்முதல் விலை முந்தைய ஆதார விலையைக் காட்டிலும் 16% அதிகம். 75 கிலோ நெல், அரிசியாக மதிப்பூட்டப்படும்போது அதன் விலை தோராயமாக ரூ.1,200 ஆகத்தான் இருக்கிறது. ஆனால், சந்தையில் இது 100% அதிக லாபத்துக்கு விற்பனையாகிறது.

உழுது விதைத்து அறுத்தவனுக்குக் கிடைத்தாலும்கூட, இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிலைமை அதுவாக இல்லையே. இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் அல்லவா கொழிக்கிறார்கள். அரிசி, வாழ்வின் இன்றியமையா உணவு தானியம். அதை மக்கள் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்தால் விலையும் குறைவாக  இருக்கும், விவசாயிக்கும் நல்ல  கூலி  கிடைக்கும்.
  





.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



நன்றி: தின மணி

Monday, March 12, 2012

இவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்?

ஒர் அரசியல்வாதி அரசியலுக்கு வருவதற்கு முன் என்ன தொழில் செய்தார் ? இப்போது என்ன தொழில் செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் தானே அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். 

எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.  அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.  

இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு நாட்டின் மிகபெரிய கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? 

அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.  

சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். 

முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார். வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது: 

 ""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''  

அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்?

பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கட்டுப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.  

சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, இல்லையா என்று கணிக்க முடியும்.  

நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.  

தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் உண்மையாக செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் வெளிப்படையா இருந்தாக வேண்டும்.

நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. அதை வெளிப்படையா சொல்வதில் என்ன பிரச்னை?  

செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? 

தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்கள் தான் ஊழலை  ஒழிக்க வலுவான சட்டத்தை (லோக்பால் சட்டத்தை) இயற்ற போகிறார்களாம்...  அப்படியே இயற்றினாலும் அந்த சட்டம் எப்படி இருக்கும்....





.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................


நன்றி: தினமணி