Tuesday, October 8, 2013

அரசுக்கும் நமக்கும் வேண்டும் பொறுப்பு!

உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை.

பல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள்.

ஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய விவரங்களைப் புத்தகங்களாகவும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து செல்லும் விதத்திலான நினைவுப் பொருள்களாகவும் விற்பனைச் செய்து பெருமை தட்டிக் கொள்வதும், எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உலகிலேயே மிகப் பழமையான சரித்திரத்தை உடைய நமது இந்தியாவின் நிலைமை மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. தென்னிந்தியாவிலுள்ள பல ஆலயங்களையும், அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்களையும், மாமல்லபுரம் குடவரைக் கோவில்களையும், நாம் இன்னும் முழுமையான பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உள்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அவற்றைப் பற்றிய குறிப்புகளும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தரப்படும் கையேடுகளும்கூட கவர்ச்சிகரமாகவும் முறையாகவும் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாம் நமது பெருமைகளை உதாசீனப்படுத்துகிறோம் என்பது தெரிகிறது.

இப்படிப்பட்ட நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மத்திய கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை பற்றிய தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை எந்த அளவுக்கு அந்தத் துறை, அரசால் வழங்கும் நிதியை முறைகேடாக வீணாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஏறத்தாழ 5000 ஆண்டு அறியப்பட்ட சரித்திரப் பின்னணியுடைய இந்தியாவில் எண்ணிலடங்காத நினைவுச் சின்னங்களும், பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டிய சரித்திரச் சான்றுகளும் பரந்து கிடக்கின்றன.

அவ்வப்போது அகழ்வாராய்ச்சிகள் மூலம் பல புதிய சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையிடம், அதன் கண்காணிப்பில் எத்தனை நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிற தகவல்கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பல அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால் அதை என்னவென்று சொல்வது? தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

பழமையான பல கலைப் பொக்கிஷங்கள், பட்டியலில் காணப்படுகின்றன. ஆனால், களவு போயிருக்கின்றன. சில சரித்திரச் சின்னங்களே காணாமல் போயிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஒன்று, அவை ரியல் எஸ்டேட்காரர்களால் கட்டடம் கட்ட இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து அழிந்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்தியத் தொல்லியல் துறை, அந்தச் சின்னங்களின் பராமரிப்புக்கான செலவை மட்டும் கணக்கெழுதி வந்திருக்கிறது...!

இல்லாத நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதி ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். நமது திருமலை நாயக்கர் மகால் போன்ற பல சரித்திரச் சின்னங்கள், போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் சீரழிந்து வருகின்றன. அதைப் பாதுகாக்க வேண்டிய இந்தியத் தொல்லியல் துறையோ, கவலைப்படாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது கணக்குத் தணிக்கை அறிக்கை.

தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரிகளின் அறிக்கையின் முக்கியக் குற்றச்சாட்டு, இந்தியத் தொல்லியல் துறை, சரித்திரச் சின்னங்களைப் பராமரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தை நவீனப்படுத்தி வகுக்கவில்லை என்பது. காலனிய ஆட்சி வகுத்த பாதையில்தான் இப்போதும் அந்தத் துறை செயல்படுகிறது.

மத்திய அரசின் கலாசார அமைச்சகமும் சரி, நமது பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், இந்தியத் தொல்லியல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

பாரம்பரியப் பெருமைகளை, சரித்திரச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் உண்டு. பொதுமக்கள் அக்கறை செலுத்தவோ, கவலைப்படவோ தயாராக இல்லாத நிலையில், அதற்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்படுகின்றன.

அரசு விழித்துக் கொள்கிறதோ இல்லையோ, நாம் விழித்துக் கொண்டாக வேண்டும். பாரம்பரியச் சின்னங்கள் இந்தியாவின் சொத்து. நமது சொத்து. அவை அழிந்துவிட கூடாது!




.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)

Monday, October 7, 2013

அமெரிக்காவில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்குமா?

தவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு, கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

குறிப்பாக, நிதியமைச்சகத்தின் பல தவறான முடிவுகள்தான் இன்று ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதற்கும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும் காரணம். இப்போது மீண்டும் ஒரு தவறான முடிவை நிதியமைச்சகம் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

ப்ரிட்ஜ், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன், மோட்டார் சைக்கிள் போன்ற மத்திய தர வகுப்பினர் பரவலாக வாங்க ஆசைப்படும் பொருள்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

இதன் மூலம் நுகர்வோர் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதும், உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நிதியமைச்சகத்தின் நோக்கம்.

 அதனால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து புதிய வேகத்துடன் இயங்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப் போவதும் இல்லை. இறக்குமதி குறையப் போவதும் இல்லை.

சற்று யோசித்துப் பார்த்தால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக் கூடும் என்பதும் அதனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரே மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.

நமது இன்றைய உடனடித் தேவை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது. அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாதவை எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கான சுங்க வரியை அதிகப்படுத்துவது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. அடுத்தாற்போல, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அதே வேளையில் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவும் வழிகோலுவது.

இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு அதிகக் கடனுதவி வழங்குவதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. குறைந்த வட்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்குவதன் மூலம், அந்த வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்குமே தவிர குறையாது. அது மட்டுமா?

 ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மேலும் கடனாளிகளாக்குவதன் மூலம், அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவும் இது முடியும்.

குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பொருள்களை வாங்குவோரும் நாளையே வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் கடனைத் திரும்பி அடைக்க மாட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளோ, தேவையை உத்தேசித்த கடன் விநியோகமோ இல்லாமல் போனால் 2008 இல் அமெரிக்காவில் நடந்தேறிய வங்கி திவால் நிலைக்கு நமது அரசுடமை வங்கிகளும் தள்ளப்படும்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி கூறியிருப்பதுபோல, இப்போதே அரசு வங்கிகளிடம் இருக்கும் வைப்பு நிதியின் 78 விழுக்காடு கடனாக வழங்கப்பட்டுவிட்ட நிலைமை. இதற்கு மேலும் கடன் வழங்கி அவை வாராக் கடனாகப் போனால், வங்கிகள் தடுமாறத் தொடங்கிவிடும்.

அரசு நிதியுதவி அளிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு உதவி செய்துவிட முடியும் அல்லது பங்களிப்பு நல்க முடியும்? அந்த அளவுக்கு அரசிடம் அதிகப்படியான நிதியாதாரம் இருந்தால் பொருளாதாரம் இப்படி தள்ளாட வேண்டிய அவசியமே இல்லையே.

இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றிலும் தனியார்மயம், தனியார் பங்களிப்பு என்று பேசும் அரசு, இதுபோன்ற சிறுகடன்களையும், நுகர்வோர் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கும்படி தனியார் பன்னாட்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்குவதுதானே? வாராக்கடனாகும் வாய்ப்புள்ள கடன் விநியோகம் என்றால் அது அரசு வங்கிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்வது என்ன நியாயம்?


நிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் பலமே நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மனப்பான்மைதான். தயவுசெய்து, அதை உருக்குலைத்து, மக்களைக் கடனாளியாக்கி நடுத்தெருவில் நிறுத்தத் திட்டம் தீட்டாதீர்கள்!




.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)