Sunday, December 16, 2018

மேகதாது புதிய அணை: கூட்டாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாகிவிடும்

மேக்கேதாட்டில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்காக கர்நாடக மாநிலத்திற்கும், அதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய நீர் வளத்துறைக்கும் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தமிழகத்திலுள்ளஅரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்னையில் ஒருங்கினைந்து குரல் கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.


கர்நாடக மாநிலத்தில் சுமார் 150 மீட்டர் அகலத்தில் பாய்ந்து வரும் காவிரி, மேக்கேதாட்டு பகுதியை அடையும்போது அங்கே உள்ள பாறைகளின் ஊடாக சுமார் 10 மீட்டர் இடைவெளியில் பாய்ந்து வெளிவருகிறது. ஆடு தாண்டும் அளவில் இருக்கும் இந்த பாறைகள்தான் கன்னடத்தில் மேக்கேதாட்டு என்று அழைக்கப்படுகிறது. மேக்கே என்றால் ஆடு, தாட்டு என்றால் தாண்டு என்று பொருள். இந்த ஆடு தாண்டும் பாறையை அடிப்படையாகக் கொண்டு குறுகிய இடைவெளியில் காவிரி செல்லும் பகுதியில் அணை அமைக்க நீண்ட நாள்களாகவே கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது.


இயற்கை அதிக அளவில் மழை தந்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் தேக்கிவைக்க முடியாமல் தண்ணீரைத் திறந்துவிட்டாக வேண்டும். அப்படி இரு அணைகளும் நிரம்பி வழிந்ததால்தான் இப்போது காவிரியில் தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வருகிறது. அதையும் பொறுக்கமாட்டாமல், மேக்கேதாட்டில் அணை கட்டி அதைத் தேக்கி வைக்க விரும்புகிறது கர்நாடகம்.


ஏற்கெனவே காவிரியில் ஐந்து இடங்களிலிருந்து சுமார் 10 டிஎம்சி தண்ணீர் பெங்களூரு நகர பயன்பாட்டுக்காக எடுக்கப்படுகிறது. இப்போது மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடக அரசு மேலும் தண்ணீரை திருப்பிவிடும் என்றால் மழை நன்றாகப் பெய்தாலும்கூட தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு மேலும் குறையும். தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிர்ணயித்த அளவுக்கு மேலாக நன்றாக மழை பெய்தாலும்கூட, தண்ணீர் சென்றுவிடக் கூடாது என்பதுதான் கர்நாடக அரசின் நோக்கம் போல தெரிகிறது.


மேக்கே தாட்டில் புதிய அணை கட்டும் திட்டம் இன்று - நேற்று தொடங்கியது அல்ல. கடந்த 2014 முதலே கர்நாடக அரசு இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014 டிசம்பர் மாதமும், 2015 மார்ச் மாதமும் இப்போது போலவே தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும்கூட, மேக்கேதாட்டில் 67 டிஎம்சி அளவுக்கான நீரை தேக்கி வைத்துக்கொள்ள புதிய அணையை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் வளக் குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.


கீழ் படுகை மாநிலங்களின் முன்னனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் விரோதமான கர்நாடக அரசின் இந்த முயற்சியை மத்திய நீர்வளத் துறை எப்படி, எதனால், எதற்காக அனுமதிக்கிறது என்று புரியவில்லை.


கடந்த 2015 மார்ச் மாதம் மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த அணை மூலம் நீர் மின் உற்பத்தி செய்யவும், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அப்போது தெரிவிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசும்போது அன்றைய முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார். இப்போது மீண்டும் இதே பிரச்னையைக் கர்நாடகம் முன்னெடுத்திருக்கிறது.


இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஒரு மாநிலம் விரும்பினால், அந்த நதியால் பயனடையும் அண்டை மாநிலத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. இதற்கு முன்னர் காவிரி நடுவர்மன்றம் கர்நாடக அரசு காவிரி பாசனப் பகுதிகளில் தனது சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக்கூடாது என்றும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இப்படி காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றமும், அதற்கு முன் நடுவர் மன்றமும் தெளிவாகத் தீர்ப்புகள் அளித்தும்கூட, கர்நாடகம் மீண்டும் மீண்டும் தமிழகத்துக்குப் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும், அதை நடுவண் அரசு மெளனமாக ஆதரிப்பதும் வேதனை தருவதாக இருக்கிறது.

காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாற்றில் கேரளம், பாலாற்றில் ஆந்திரம் என்று தமிழகத்தின் உரிமை தொடர்ந்து வஞ்சிக்கப்படும்போது நடுவண் அரசு மெளனம் காக்குமேயானால், கூட்டாட்சித் தத்துவம் என்பது கேலிக்கூத்தாகிவிடும். அடிப்படைப் பிரச்னைகளில் அரசியல் பேசக் கூடாது, அரசமைப்புச் சட்டம்தான் பேச வேண்டும்!

..................................................................... 
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.
....................................................................
(நன்றி: தினமணி)




 

விவசாயிகள் வேதனை எப்போது தீரும்?

இந்தியா ஒரு விவசாய நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர, சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் துறை ஒன்று இருக்குமானால், அது வேளாண் துறையாகத்தான் இருக்கும். கடந்த மாதம், இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட கூடியது வியப்பை ஏற்படுத்தவில்லை.


கட்சி சார்பற்ற பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில், அநேகமாக எல்லா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அரசுத் தரப்பிலிருந்து ஒருவரும் கலந்து கொள்ளாதது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதிகரித்த குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்துதல் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் இந்தப் பேரணியிலும் வலியுறுத்தப்பட்டன. வேளாண் இடர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக இருந்தது.


கடந்த சில மாதங்களாகவே விவசாயிகளின் போராட்டம் ஆங்காங்கே வெடித்து வருகிறது. பரவலாக வன்முறையில் ஈடுபடாமல் தங்களது ஒற்றுமையையும் பலத்தையும் கட்டுப்பாடான முறையில் வெளிப்படுத்தும் விவசாயிகளின் போராட்டம் நகர்ப்புற இந்தியாவில் வேளாண் இடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தங்களது உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து இன்னும்கூட நகர்ப்புறவாசிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை ஊடகங்களேகூட அன்றாட நகர்ப்புற வாழ்க்கையை பாதிக்கும் செயல்பாடாகத்தான் வர்ணிக்கின்றன என்பது மிகப்பெரிய சோகம்.


கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. முன்பெல்லாம் வறட்சியும், போதுமான உற்பத்தியின்மையும் விவசாயிகளின் வறுமைக்குக் காரணமாக இருந்தன என்றால், இப்போது அதிகரித்த உற்பத்தி அவர்களுக்குப் பாதகமாகி இருக்கிறது. உற்பத்தி அதிகரிப்பால் உணவுப் பொருள்களின் விலை சரிந்திருக்கிறது. அதனால், விவசாயிகளின் திருப்பி செலுத்தப்படாத கடன் 20% அதிகரித்திருக்கிறது.


நிகழாண்டில் அளவுக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டும்கூட, பத்துக்கும் மேற்பட்ட முறை விவசாயிகளின் போராட்டம் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் தில்லியில் முகாமிட்டிருக்கின்றன. அவர்களது மொத்த உற்பத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது வேண்டுகோள்.


நல்ல விளைச்சல் இருந்தும்கூட, விவசாயிகள் பிரச்னையை எதிர்கொள்வதற்கு என்ன காரணம்? அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்படுவது ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது என்பது இன்னொரு காரணம். பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக் கோரல்கள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது இன்னொரு காரணம். அதனால், இந்திய விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கடனாளிகளாகவே தொடர்கின்றனர்.


ஆண்டொன்றுக்கு சராசரியாக 15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுவிட்டு, விவசாயக் கூலிகளாக மாறியிருக்கும் சம்பவங்கள் ஏராளம். இப்போதெல்லாம் விவசாயிகளின் தற்கொலை எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை; பழகிவிட்டது. தேசிய குற்ற ஆவண புலனாய்வுப் பிரிவுகூட கடந்த 2016 முதல் விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதிலிருந்து, எந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் நாசிக்கிலிருந்து மும்பைக்கு மிகப்பெரிய பேரணி நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த வாரம் மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோலத்தான் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஹரியாணா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளின் பிரச்னை ஒரே மாதிரியானதுதான். தங்களுக்கு அதிகரித்த விலை கிடைக்க வேண்டும், முறையான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வேண்டும், அரசு நிர்வாகத்தின் ஊழல் அகற்றப்பட வேண்டும் என்பவைதான் அவர்களின் கோரிக்கைகள்.


தெலங்கானாவில் விவசாயிகளுக்குப் பயிரிடுவதற்கான மானியம் வழங்கியிருப்பது, கர்நாடகத்தில் இணையச் சந்தை ஏற்படுத்தியிருப்பது, மகாராஷ்டிரத்தில் இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளுக்கு மாற்றுவழி ஏற்படுத்தியிருப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, இவை எதுவுமே விவசாயிகளுக்கு நிரந்தரமான தீர்வை உருவாக்கிக் கொடுத்து விடவில்லை.


வேளாண் இடர் என்பது நிஜம். வேளாண் இடரை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. வேளாண் இடருக்கு விடை காண முடியாமல் போனால், ஆட்சி மாற்றத்துக்கு ஆட்சியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது வரலாறு.

..................................................................... 
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.
....................................................................
(நன்றி: தினமணி)




"கஜா' புயல்: மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தொலைநோக்கு திட்டம் வேண்டும்

"புயலுக்குப் பின்னே அமைதி' என்று கூறுவார்கள். ஆனால், "கஜா' புயல் அடித்து ஓய்ந்து ஒரு மாதம் கடந்த பின்னும்கூட, இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருப்பதால் நிவாரணப் பணிகளையும் முழு மூச்சில் நடத்த முடியாத சூழல்தான் காணப்படுகிறது. இப்படியொரு பேரழிவு, இதற்கு முன்னால் தமிழகத்தைத் தாக்கிய தானே, ஒக்கி, வர்தா புயல்களின்போதுகூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய குழுவினர் தமிழகம் வந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அவர்கள் நேரில் சென்று புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னொருபுறம், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி, அவ்வப்போது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறது. 

கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கிய ஆழிப்பேரலையின்போதுகூட இப்போதைய கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளவில்லை. பல லட்சம் மதிப்புள்ள படகுகள் உடைந்து சிதறியிருக்கின்றன. பல லட்சம் மதிப்புள்ள வலைகள் கிழிந்துபோய் காணப்படுகின்றன. பல படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. என்னதான் இழப்பீடு வழங்கப்பட்டாலும்கூட, நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகும். குடிசை உள்ளிட்ட அவர்களது அனைத்து உடைமைகளையும் கஜா புயல் கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான தொழில் உப்பு உற்பத்தி. கடந்த அக்டோபர் மாதமே உப்பு உற்பத்தி முடிந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் கஜா புயல் நாகை, திருவாரூர் மாவட்டங்களைத் தாக்கியது. ஒருசில மணி நேரங்களில் மலை போல் உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பு, புயல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதால் 40 நாள் உழைப்பும் சில நொடிகளில் வீணானது. ஏற்றுமதிக்குத் தயாராக, ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் பரப்பில் வைத்திருந்த உப்பு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. 

2,000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மாமரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலான உழைப்பு சில மணி நேரங்களில் வீணானது. இந்த இழப்பின் தாக்கம், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் மிகப்பெரிய சோகம். மாமரங்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாகத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருப்பது தென்னை மரங்கள்தான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வேதாரண்யத்தில் தொடங்கி, பேராவூரணி வரையிலான பகுதிதான் இந்தியாவின் தலைசிறந்த தேங்காய் களஞ்சியம் என்று கூற வேண்டும். இந்தியாவின் மொத்தத் தேவையில் குறைந்தது 30% முதல் 40% தேங்காய் இந்தப் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. வேதாரண்யம், கருப்பம்புலம், தொண்டியக்காடு, இடும்பவனம், தில்லை விளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை, செம்படவங்காடு, தம்பிக்கோட்டை, மரவக்காடு, அதிராமப்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாதிப்பு என்று கருத வேண்டும். 

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் குறைந்தது ஐந்தாறு தென்னை மரங்கள் காணப்படும். ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ள தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றால், நூற்றுக்கணக்கில் தென்னை மரம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்க அளவில்தான் காணப்படும். மற்றவர்கள் எல்லாம் நூற்றுக்கும் குறைவான, சொல்லப்போனால், 20-க்கும் குறைவான தென்னை மரங்களை வைத்திருப்பவர்கள். அதனால், பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமே தென்னையிலிருந்து கிடைக்கும் வருவாய்தான். இப்போது அந்த வருவாயை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள் பலரும். 

நிவாரணம் என்ற பெயரில் அரசு இழப்பீடு வழங்குவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மீட்டுக் கொடுத்துவிடாது. அதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் இழந்திருக்கும் தென்னை மரங்களுக்கு ஈடாக இரண்டு ஆண்டுகளில் பலன் தரும் "ஹைப்ரிட்' தென்னங்கன்றுகளை அவர்களுக்கு வழங்குவதும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு தொகையை வழங்குவதும்தான் புத்திசாலித்தனமான, திட்டமிட்ட நிவாரணமாக இருக்கும். 

பள்ளிக் கட்டணங்களை செலுத்தும் நிலையில் பெற்றோர் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு தடை படக்கூடும். அத்தனை வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பணப்புழக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் மீண்டு சகஜ வாழ்க்கைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் திரும்பப் போவது எப்போது என்று புரியவில்லை. 

உடனடி நிவாரணம் அத்தியாவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மறுவாழ்வு பெற்று, பாதிக்கப்பட்ட பகுதியினர் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு, தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டமிட்டாக வேண்டும்.


..................................................................... 
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.
....................................................................
(நன்றி: தினமணி)

கஜா புயல்: மக்கள் துயர் துடைக்க அனைவரும் இணைந்து செயல் படவேண்டும்

தமிழகத்தில் "கஜா' புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைச் சொல்லி மாளாது. இதுவரை 46 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, நிலைமை இன்னும் சீராகவில்லை என்பதிலிருந்தே, கஜா புயலினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு எத்தகையது என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.


தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் "கஜா' புயலின் பாதிப்பால் குறைந்தது 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் முழுமையாகச் சீர்செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும் போலிருக்கிறது.

110 கி.மீ. வேகத்தில் "கஜா' புயல் கரையைக் கடந்தபோது, கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களும் பலத்த காற்றினாலும் கனமழையினாலும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. பயிர் இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் மாநில அரசு நிவாரணம் வழங்கி, ஆறுதல் அளிக்க முற்பட்டிருக்கிறது என்றாலும், ஏற்பட்டிருக்கும் அழிவு வேளாண் குடிமக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் ரணத்துக்கு அவை ஆறுதலாக இருக்குமே தவிர, ஈடாகமாட்டா.

ஒருவகையில் பார்த்தால், "கஜா' புயலை எதிர்கொள்ள தமிழக அரசு ஓரளவுக்குத் தயாராகவே இருந்தது என்றுதான் கூறவேண்டும். புயல் அடிப்பதற்கு நான்கு ஐந்து நாள்கள் முன்பாகவே அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதிப்பை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இல்லை. குறிப்பாக, பால் விநியோகம், குடிநீர் விநியோகம் இரண்டு குறித்தும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும்கூட, மிகப்பெரிய பாதிப்பு நேரிடும்போது அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடம்புரண்டுபோனதில் வியப்பொன்றுமில்லை.

நல்ல வேளையாக மீனவர்கள் எச்சரிக்கப்பட்டதால் கடலுக்குச் செல்லவில்லை. ஆனாலும் கூட, கடற்கரைப் பகுதியில் வசிப்பவர்கள் என்பதால் அவர்கள் வசிக்கும் வீடுகள் அதிவேக புயற்காற்றின் முழு தாக்கத்தையும் எதிர்கொண்டு இருக்குமிடம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. மீனவர்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.  

ஒவ்வொரு முறை இயற்கைப் பேரிடர் ஏற்படும்போதும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அந்த இயற்கைப் பேரிடர் குறித்து ஆய்வு செய்யும். முடிவில் எடுக்கப்படாத நடவடிக்கைகள், முறையான நிவாரணம் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, போதிய நிதி ஒதுக்கப்படாமல் போவது, பேரிடர்களை எதிர்கொள்ளப் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பது, ஒதுக்கப்பட்டநிதி செலவிடப்படாமல் இருப்பது, முன்கூட்டியே முறையாகத் தகவல் தரப்படாதது உள்ளிட்ட காரணிகள் அறிக்கைகளின் பட்டியலில் இடம் பெறும். இவையெல்லாம் வெள்ளப் பெருக்கத்திற்கும், நிலநடுக்கத்திற்கும், அடைமழைக்கும் பொருந்தும். ஆனால், எல்லாவிதமான முச்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறியடித்துவிடும் இயற்கைச் சீற்றமான புயலால் ஏற்படும் பாதிப்புக்கு இவை எதுவுமே பொருந்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2011, டிசம்பர் 30-ஆம் தேதி "தானே' புயல்; 2016, டிசம்பர் 11-ஆம் தேதி "வர்தா' புயல்; 2017, நவம்பர் 29-30-ஆம் தேதி "ஒக்கி' புயல் வரிசையில் இப்போது 2018 நவம்பர் 16-ஆம் தேதி "கஜா' புயலும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அரசு என்னதான் திட்டமிட்டு முயன்றாலும் கூட, "கஜா' புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவிலிருந்து முழுமையாக  மீண்டுவிடவோ அல்லது குற்றங்குறை இல்லாமல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவிடவோ முடியாது என்பதும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை மிகக்குறுகிய கால அளவில் சீர் செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்பதும் அனைவருக்குமே தெரியும்.

விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயத்துக்காக இருக்கக் கூடாது. 

அதேபோல அரசும், முன்வைக்கப்படும் விமர்சனங்களை அரசியல் என்று ஒதுக்கிவிடாமல் ஆக்கபூர்வமான ஆலோசனையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டாக வேண்டும். 

கஜா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களின் துயரத்துக்கு ஒருங்கிணைந்து விடைகாண வேண்டிய நேரம் இது. அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.




..................................................................... 
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.
....................................................................
(நன்றி: தினமணி)