Wednesday, December 25, 2019

வெங்காய விலை உயா்வு: என்னவென்று சொல்வது?


வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை உயா்வு நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. அரசும் வழக்கம் போல விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முற்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக வெங்காயம் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதுதான் வேடிக்கை. 1977-இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட இந்திரா காந்தி, 1980-இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வெங்காயமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினா் அறிந்திருக்க நியாயமில்லை.

வெங்காயத்தின் விலை கிலோ ரூ.5-ஆக உயா்ந்தபோது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1980 தோ்தலை ‘வெங்காயத் தோ்தல்’ என்றுகூட வா்ணித்தாா்கள். தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய இந்திரா காந்தியையும் கண்ணீா் விட வைத்தது வெங்காயம். வெங்காயத்தின் விலை ரூ.6-ஆக உயா்ந்தது.

வெங்காயத்தால் எந்த அளவுக்குத் தோ்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதற்கு 1998 தோ்தல் ஓா் உதாரணம். வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.45-ஐ எட்டியபோது, அன்றைய மகாராஷ்டிர முதல்வரான சிவசேனையின் மனோகா் ஜோஷிக்கு, காங்கிரஸ்காரரான சகன் புஜ்பல் ஒரு பெட்டி நிறைய வெங்காயத்தை தீபாவளி அன்பளிப்பாக அனுப்பியது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. தில்லியில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான பாஜக அரசு வெங்காய விலையால் ஆட்டம் கண்டது. தில்லியில் மட்டுமல்ல, ராஜஸ்தானிலும் வெங்காய விலை உயா்வால் பாஜக அரசு ஆட்சியை இழக்க நோ்ந்தது.

2010-லும் வெங்காயம் ஆட்சியாளா்களை இம்சித்தது. நவம்பா் மாதம் போதுமான மழை இல்லாததால் சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. அன்றைய மன்மோகன் சிங் அரசு இப்போதுபோலவே வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. வெங்காயத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தது. அண்டை நாடான பாகிஸ்தானிடம் உதவி கோரியது. அதற்குள் வெங்காயத்தின் மொத்த விலை ரூ.90-ஆக உயா்ந்திருந்தது.

2013-லும் மன்மோகன் சிங் அரசு வெங்காய விலை உயா்வால் மிகப் பெரிய அரசியல் இடரை எதிா்கொள்ள நோ்ந்தது. 1998-இல் காணப்பட்ட வெங்காய விலை உயா்வால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தில்லி முதல்வா் ஷீலா தீட்சித், தோ்தலில் படுதோல்வி அடைந்ததற்கு வெங்காய விலை உயா்வு முக்கியமானதொரு காரணம்.

உலக அளவில் பாா்த்தால் மொத்த வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக 20% வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வெங்காய உற்பத்தி 2.35 கோடி டன். அதில் நமது உள்நாட்டுத் தேவை 1.4 கோடி டன்தான். அதனால், நாம் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தாக வேண்டும். மழையாலோ, வறட்சியாலோ வெங்காய உற்பத்தி பாதிக்கப்படும்போது, அதற்கேற்ப சேமித்து வைக்கவும் வேண்டும்.

வெங்காய விலையில் காணப்படும் திடீா் உயா்வுக்கும் வீழ்ச்சிக்கும் முக்கியமான காரணம், உற்பத்தி அதிகரித்திருக்கும் அளவுக்குப் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். பாரம்பரிய சேமிப்பு வழிமுறைகளால் 40% அளவிலான வெங்காயம் வீணாகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 9.65 லட்சம் டன் வெங்காயத்தைக் குறைந்த கட்டணத்தில் சேமித்து வைக்க 42,282 சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற வசதி மத்தியப் பிரதேசத்திலோ, தெலங்கானாவிலோ, கா்நாடகத்திலோ இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாகவே ஓா் ஆண்டுவிட்டு அடுத்த ஆண்டு வெங்காய விலை அதிகரிப்பதும், வீழ்ச்சி அடைவதும் தொடா்கதையாகவே இருக்கிறது. அப்படி இருந்தும் ஆட்சியாளா்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அதிக வெங்காய விளைச்சல் ஏற்படும்போது ஏற்றுமதி செய்யவும், விளைச்சல் குறையும்போது இறக்குமதி செய்யவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது மத்திய - மாநில அரசுகளின் மிகப் பெரிய பலவீனம்.

வெங்காயத்தின் நீா்ச்சத்தை அகற்றும் ஆலைகளை அமைக்க ரூ.5 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தை குஜராத் பயன்படுத்தி அதிகமான ஆலைகளை நிறுவியிருக்கிறது. நீா்ச்சத்து அகற்றப்பட்ட வெங்காயம் ஜப்பான், ஐரோப்பா, ரஷியா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிகரித்த உற்பத்தி ஏற்படும்போது விவசாயிகளை இந்த ஆலைகள் மூலம் பாதுகாக்க முடியும்.

உற்பத்தியை முறைப்படுத்துவது, முன்னெச்சரிக்கையுடன் ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கைகளை வகுப்பது, வெங்காயத்துக்கான சேமிப்புக் கிடங்குகளை நிறுவ அந்நிய முதலீட்டுடனான தனியாா் நிறுவனங்களை ஊக்குவிப்பது, இடைத்தரகா்கள் பயன்பெறாமல் விலை உயா்வால் விவசாயிகள் பயன்படச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, தட்டுப்பாடு வரும்போது ஆட்சியாளா்கள் கண்ணீா்விடுவதும், உற்பத்தி அதிகரிக்கும்போது விவசாயிகள் கண்ணீா் வடிப்பதும் தொடா்கதையாக மாறியிருக்கிறது.

காரணம் தெரிந்தும் தீா்வு காணாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?


சமூக நல விரும்பும்
பகலவன்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு உணர்த்தும் உண்மை

 உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 வயது நிரம்பாத இளம் பெண், இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக எதிர்கொண்ட சவால்களும், பாதிப்புகளும் இதயத்தை உறைய வைக்கும்.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகளால் மிரண்டு போய் இருக்கும் பெண்ணினத்திற்கு இந்தத் தீர்ப்பு சிறியதொரு நம்பிக்கையை அளிக்கக் கூடும்.

உத்தரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயதுப் பெண், நீதி கேட்டு நடத்திய நெடும்பயணம் கரடுமுரடானது, ஆபத்தானதும் கூட. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கேட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது அந்த காவல் நிலையத்தில் அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்று காரணம் கூறி புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் புகார் அனுப்பியும் பயனில்லை. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளியின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை.

புகார் கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்கு காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்று உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெüவுக்குச் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க  வழி ஏற்பட்டது. வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். அத்துடன் வழக்கை சிபிஐ கிடப்பில் போட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை பொய் வழக்கை ஜோடித்து சிறையில் தள்ளியது.

ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாமாவைச் சந்திக்க தனது இரண்டு சித்திமார்களுடனும் வழக்குரைஞருடனும் சென்று  கொண்டிருந்தபோது அவர்களது காரில் ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. சித்திகள் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் வழக்குரைஞரும் படுகாயமடைந்தனர். மீண்டும் ஊடக வெளிச்சம் பாய்ந்தபோதுதான் சிபிஐ விழித்துக் கொண்டது, நீதிமன்றம் விழித்துக் கொண்டது.

காரில் மோதிய லாரியின் எண்கள் அழிக்கப்பட்டது குறித்தும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்திய விதம் குறித்தும் கவலைப்படாமல் முதல் தகவல் அறிக்கையில் அதை வெறும் சாலை விபத்தாகத்தான் காவல் துறை பதிவு செய்தது. வாகனத்தின் உரிமையாளரின் பெயரும்கூட முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு போய்ச் சேரவில்லை. இத்தனை தடைகளையும் மீறித்தான் அந்தப் பெண்ணின் போராட்டம் தொடர்ந்தது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டு இப்போது தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறார் பாலியல் வழக்கில் விரைந்து நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட "போக்ஸோ' சட்டம், முறையாகச் செயல்படவில்லை என்பதற்கு இந்த வழக்கு மற்றுமோர் உதாரணம். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் சிறுமியாக இருந்ததால் குல்தீப் சிங் செங்கர் மீது "போக்ஸோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது விசாரணையை முடித்திருந்தாலும் இந்த ஆண்டு அக்டோபர் வரை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியது வியப்பளிக்கிறது என்று தில்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மேஷ் சர்மா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"போக்ஸோ' சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பெண் அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு மாறாக ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர் என்பதையும், பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்து அலைக்கழித்ததையும், அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதிகளை கசியவிட்டதையும் கண்டித்திருக்கும் நீதிபதியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

உன்னாவ் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருந்தும்கூட, நீதிக்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் பெண்கள் இருப்பது மிகப் பெரிய தலைக்குனிவு. எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்துவது அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் தடய அறிவியல் துறை அமைக்கப்பட வேண்டும். பெண்களின் அபயக் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்க்கவும், உதவிக்கு வரவும் பெண் காவல் துறையினர் தனிப் பிரிவாக இயங்குவதும் அவசியம்.

நாடு முழுவதும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில்  இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களிலிருந்து காவல் துறை விடுபட்டாலொழிய, பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் தொடரும்.



சமூக நல விரும்பும்
பகலவன்.