Sunday, November 13, 2011

பெட்ரோல் விலை எப்போது குறையும் ?

 பெட்ரோல் விலை செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.  

இதுவரை எந்த எண்ணெய் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டவில்லை. அவர்கள்   ஆண்டு வருமான கணக்கில் பல கோடி லாபம் காட்டியுள்ளனர். அப்படியிருந்தும்  விலையை  உயர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட,  இதை  நிதியமைச்சகம் கண்டுகொள்ளவில்லை . பெட்ரோலிய அமைச்சரும் , நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை. 

இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 வசூலிக்கப்படுகிறது. மேலும் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 சதவீதமும், டீசலுக்கு 21.43 சதவீதமும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
இதில் ஏதாவது ஒரு வரியில் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதற்கு மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்டது.

விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா? 

ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார். 

அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். 

விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65, வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.  

 கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? 
ஏன் தீர்வைவரியை  ரூ.2 குறைத்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்த்து இருக்கலாமே?
ப்படி பெட்ரோல், டீஸல் விலையை   ஏற்றிவிட்டு  , கூடவே விலை வாசியையும் விண்ணை முட்டு அளவுக்கு ஏற்றி விடும் மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொட ஏன் யாரும் முன்வரவில்லை? இதை  இப்படியே விட்டால் நாட்டில் ஏழை , நடுத்தர மக்களின்  வாழ்க்கை தரம் மிகவும் மோசமான நிலையை  அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
  
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.

மக்கள்  தாங்கள் படும் கஷ்டத்தை  எப்போது அரசுக்கு புரியவைக்கிறார்களோ அப்போது தான் இதற்கு  விடிவு  காலம் பொறக்கும் போலும்......................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................
(நன்றி: தினமணி)

No comments:

Post a Comment