Wednesday, October 8, 2014

ஆசிய விளையாட்டுப் போட்டியில் (2014) 8 வது இடம் கேவலத்திலும் கேவலம்!

கடந்து முடிந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நிலைமையை மகிழ்ச்சி கலந்த துக்கம் என்றோ, துக்கம் கலந்த மகிழ்ச்சி என்றோதான் குறிப்பிட வேண்டும். மகிழ்ச்சிக்கான காரணங்களைவிட துக்கப்படுவதற்கான காரணங்கள்தான் அதிகமாக உள்ளன என்றாலும், ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்றெடுத்து நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்கிற பெருமகிழ்ச்சி பெற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
எதிர்பார்த்தது போலவே தென்கொரியாவிலுள்ள இன்சியான் நகரில் நடந்து முடிந்திருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் வெற்றிகள் பாராட்டும்படியாக இல்லைதான். பதக்கம் வென்ற முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகையுடைய இந்தியா இருந்தது என்று வேண்டுமானால் நம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
342 பதக்கங்களை வென்ற சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் 57 பதக்கங்கள், நாம் விளையாட்டில்கூட அந்த நாட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்கு நமது விளையாட்டு வீரர்களைக் குறை கூறுவதைவிட, திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவோ, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அவர்களைத் தயார்ப்படுத்தவோ முனைப்புக் காட்டாத அரசையும், அதிகாரிகளையும்தான் குற்றப்படுத்தியாக வேண்டும்.
நமது விளையாட்டுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டி ஓர் எடுத்துக்காட்டு. குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நேர்ந்த அவலம், நாம் எந்த அளவுக்கு நமது விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாகவும், உதவுபவர்களாகவும் இல்லை என்பதை வெளிச்சம் போடுகிறது.
மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் சரிதாதேவி வெற்றி பெற்றார் என்பதை உலகமே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே வந்திருந்த விளையாட்டுத் துறை நிபுணர்களும், ஆசிய விளையாட்டு போட்டி குறித்து தங்கள் தேசத்துப் பத்திரிகைகளுக்காக செய்தியனுப்ப வந்திருந்த நிருபர்களும், சரிதாதேவிதான் வெற்றி பெற்றார் என்றும், தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் குரலெழுப்பினார்கள். இதெல்லாம் எதற்கு, சரிதாதேவியை எதிர்த்துப் போட்டியிட்ட தென்கொரிய வீராங்கனையேகூடத் தமக்கு அதிர்ஷ்டவசத்தால் வெற்றி கிட்டியதாகவும், தங்கப் பதக்கம் சரிதாதேவியைச் சேர வேண்டியது என்றும் பேட்டி கொடுக்கிறார்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, தென்கொரிய வீராங்கனை தனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தைப் பெறத் தயங்குகிறார். ஆனால், சரிதாதேவிக்காகப் பரிந்து பேசவும், அவருக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தரவும், இங்கிருந்து சென்ற இந்திய அணியின் நலன்களைப் பாதுகாக்கவும் நாம் அனுப்பிய அதிகாரிகள், பிரச்னையில் தலையிடாமல் வாளாவிருந்து விட்டனர். சரிதாதேவிக்கும், இந்தியாவுக்கும் நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய தங்கப் பதக்கம் கைநழுவிப் போனது.
எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டி நடந்தாலும் விளையாட்டு வீரர்களைவிட அதிகமான அளவில் அதிகாரிகள் அவர்களுடன் செல்கிறார்கள். அதில் பலரும் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் சொந்தச் செலவில் (?) விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க அழைத்தும் செல்கிறார்கள். இவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் உறுப்பினர்களாக இடம் பெறுவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, இங்கிருந்து அழைத்துச் செல்லும் விளையாட்டு வீரர்களின் முழுத் திறமையும் வெளிப்படுவதற்கு உதவியாகவோ, விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பதக்கங்களைப் பெற்றுத் தரவோ உதவுவதே இல்லை.
மத்திய இணையமைச்சர்களான ஜெனரல் வி.கே. சிங்கும், கிரென் ரிக்ஜுயும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களுடன் அனுப்பப்பட்ட அதிகாரிகளின் செயல்பாட்டை விமர்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, அதிகாரிகள் தண்டிக்கப்படாதவரை இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாது.
உலகின் மிகப்பெரிய வல்லரசாக வேண்டும் என்று கனவு காணும் ஒரு தேசம், உலகில் இரண்டாவது அதிகமான மனிதவளம் உள்ள நாடு, ஆசிய விளையாட்டுப் போட்டியில்கூட எட்டாவது இடத்தில்தான் வர முடிகிறது என்பது கேவலத்திலும் கேவலம். இந்த அவலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாக வேண்டும்!

..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)

முதல் முயற்சியிலேயே விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு!

இதுவரை எந்தவொரு நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றதில்லை என்பதால், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்படும் நிகழ்வை உலகமே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை ஏவியதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்காக நமது விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி இப்போது அமெரிக்காவின் மார்ஸ் ஒடிஸி, எம்.ஆர்.ஓ. விண்கலங்களும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் சுற்றி வருகின்றன. அமெரிக்காவின் ஆப்பர்ச்சூனிட்டி, மேவன் ஆகிய ரோவர்கள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்து வருகின்றன. இவற்றோடு இப்போது மங்கள்யானும் ஆய்வில் இணைந்துள்ளது.

ஆறு மாதம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து வளி மண்டலத்தில் மீத்தேன் வாயு, நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு, கனிம வளம் தொடர்பான ஆய்வுகளை மங்கள்யான் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக 5 கருவிகள் மங்கள்யானில் அனுப்பப்பட்டுள்ளன.

மங்கள்யானின் வெற்றியைக் கொண்டாடும் அதேநேரத்தில், அதிலுள்ள அறிவியல் கருவிகளின் எடை மொத்தம் 15 கிலோ மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

"கிராவிட்டி' என்ற ஹாலிவுட் திரைப்படத்துக்கான பட்ஜெட்டை (ரூ.600 கோடி) விட, மங்கள்யான் திட்டத்துக்கான செலவு (ரூ.450 கோடி) குறைவு. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேற்பரப்பை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய மேவன் விண்கலத்துக்கான செலவோ 4,083 கோடி ரூபாய்.
இரண்டு விண்கலங்களின் நோக்கங்களும் வெவ்வேறானவை என்றாலும், திட்டச் செலவில்தான் எவ்வளவு வித்தியாசம்? இந்த வெற்றி இந்திய செயற்கைக்கோள்களின் மதிப்பை பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செவ்வாய் கிரகத்தை நோக்கி அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த மங்கள்யான் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அதற்குரிய பாதையில் செலுத்துவது என்பது எளிதான காரியமல்ல. ஆனாலும், அதைத் திட்டமிட்டு மிக நேர்த்தியாக நமது விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

22 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு அருகில் விண்கலம் செல்லும்போது, இங்கிருந்து அடையாளக் குறிகள் (சிக்னல்) சென்று சேர 12 நிமிடம் வரை தாமதம் ஆகும். செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் பயணிப்பதற்கு முன்பாக, விண்கலம் செவ்வாய் கிரகத்துக்குப் பின்புறம் செல்லும் என்பதால், அப்போது அதைத் தொடர்பு கொள்ளவும் முடியாது.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் விண்கலத்தில் அமைத்திருந்தனர். கட்டளைகள் இல்லாமல் தானாகவே இயங்கவும், கட்டளைகளை முன்கூட்டியே பதிவு செய்துவைக்கவும் விண்கலத்தில் சிறிய கணினி பொருத்தப்பட்டிருந்தது.விண்கலத்தில் உள்ள திரவ இயந்திர அமைப்பு (என்ஜின்) இயங்குவதற்கான கட்டளைகள் 10 நாள்களுக்கு முன்பே அனுப்பப்பட்டன.

அதோடு, இதுவரை அறியப்படாத விண்வெளிப் பிரதேசத்தில் விண்கலம் பயணிக்கும்போது, வழிதவறிவிடாமல் இருப்பதற்காகத் தொலைதூர நட்சத்திரக் கூட்டங்களை அடையாளமாக வைத்து சரியான வழியை அறிந்துகொள்ளும் திட்டமும் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது.
இஸ்ரோவின் சாதனைக்குப் பின்னால் இவ்வளவு தெளிவான திட்டமிடல் இருந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது.

செயற்கைக்கோளைக் கட்டமைப்பதில் இந்தியாவின் நிபுணத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்பும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு
களைச் செலுத்துவதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.

அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தை நாம் கைக் கொண்டால்தான் வேற்றுக்கிரகங்களுக்கான விண்கலங்கள், தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள், நிலவுக்கு மனிதனை அனுப்புவது போன்றவற்றில் நாம் வெற்றி பெற முடியும். இதில் நமது விஞ்ஞானிகள் இன்னும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், இந்தியா விண்வெளித் துறையில் வல்லரசாக மாற முடியும்.

..................................................................... 
மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.
....................................................................

(நன்றி: தினமணி)