Wednesday, October 8, 2014

ஆசிய விளையாட்டுப் போட்டியில் (2014) 8 வது இடம் கேவலத்திலும் கேவலம்!

கடந்து முடிந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நிலைமையை மகிழ்ச்சி கலந்த துக்கம் என்றோ, துக்கம் கலந்த மகிழ்ச்சி என்றோதான் குறிப்பிட வேண்டும். மகிழ்ச்சிக்கான காரணங்களைவிட துக்கப்படுவதற்கான காரணங்கள்தான் அதிகமாக உள்ளன என்றாலும், ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்றெடுத்து நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்கிற பெருமகிழ்ச்சி பெற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
எதிர்பார்த்தது போலவே தென்கொரியாவிலுள்ள இன்சியான் நகரில் நடந்து முடிந்திருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் வெற்றிகள் பாராட்டும்படியாக இல்லைதான். பதக்கம் வென்ற முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகையுடைய இந்தியா இருந்தது என்று வேண்டுமானால் நம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
342 பதக்கங்களை வென்ற சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் 57 பதக்கங்கள், நாம் விளையாட்டில்கூட அந்த நாட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்கு நமது விளையாட்டு வீரர்களைக் குறை கூறுவதைவிட, திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவோ, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அவர்களைத் தயார்ப்படுத்தவோ முனைப்புக் காட்டாத அரசையும், அதிகாரிகளையும்தான் குற்றப்படுத்தியாக வேண்டும்.
நமது விளையாட்டுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டி ஓர் எடுத்துக்காட்டு. குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நேர்ந்த அவலம், நாம் எந்த அளவுக்கு நமது விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாகவும், உதவுபவர்களாகவும் இல்லை என்பதை வெளிச்சம் போடுகிறது.
மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் சரிதாதேவி வெற்றி பெற்றார் என்பதை உலகமே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே வந்திருந்த விளையாட்டுத் துறை நிபுணர்களும், ஆசிய விளையாட்டு போட்டி குறித்து தங்கள் தேசத்துப் பத்திரிகைகளுக்காக செய்தியனுப்ப வந்திருந்த நிருபர்களும், சரிதாதேவிதான் வெற்றி பெற்றார் என்றும், தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் குரலெழுப்பினார்கள். இதெல்லாம் எதற்கு, சரிதாதேவியை எதிர்த்துப் போட்டியிட்ட தென்கொரிய வீராங்கனையேகூடத் தமக்கு அதிர்ஷ்டவசத்தால் வெற்றி கிட்டியதாகவும், தங்கப் பதக்கம் சரிதாதேவியைச் சேர வேண்டியது என்றும் பேட்டி கொடுக்கிறார்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, தென்கொரிய வீராங்கனை தனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தைப் பெறத் தயங்குகிறார். ஆனால், சரிதாதேவிக்காகப் பரிந்து பேசவும், அவருக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தரவும், இங்கிருந்து சென்ற இந்திய அணியின் நலன்களைப் பாதுகாக்கவும் நாம் அனுப்பிய அதிகாரிகள், பிரச்னையில் தலையிடாமல் வாளாவிருந்து விட்டனர். சரிதாதேவிக்கும், இந்தியாவுக்கும் நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய தங்கப் பதக்கம் கைநழுவிப் போனது.
எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டி நடந்தாலும் விளையாட்டு வீரர்களைவிட அதிகமான அளவில் அதிகாரிகள் அவர்களுடன் செல்கிறார்கள். அதில் பலரும் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் சொந்தச் செலவில் (?) விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க அழைத்தும் செல்கிறார்கள். இவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் உறுப்பினர்களாக இடம் பெறுவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, இங்கிருந்து அழைத்துச் செல்லும் விளையாட்டு வீரர்களின் முழுத் திறமையும் வெளிப்படுவதற்கு உதவியாகவோ, விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பதக்கங்களைப் பெற்றுத் தரவோ உதவுவதே இல்லை.
மத்திய இணையமைச்சர்களான ஜெனரல் வி.கே. சிங்கும், கிரென் ரிக்ஜுயும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களுடன் அனுப்பப்பட்ட அதிகாரிகளின் செயல்பாட்டை விமர்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, அதிகாரிகள் தண்டிக்கப்படாதவரை இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாது.
உலகின் மிகப்பெரிய வல்லரசாக வேண்டும் என்று கனவு காணும் ஒரு தேசம், உலகில் இரண்டாவது அதிகமான மனிதவளம் உள்ள நாடு, ஆசிய விளையாட்டுப் போட்டியில்கூட எட்டாவது இடத்தில்தான் வர முடிகிறது என்பது கேவலத்திலும் கேவலம். இந்த அவலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாக வேண்டும்!

..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)

No comments:

Post a Comment