Thursday, November 23, 2017

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை; தமிழ் உணர்வுள்ள கட்சிகளும், இயக்கங்களும் எங்கே?


இன்று தமிழும் தமிழ் இனமும் பூமிப்பந்தில் இல்லாத இடம் இல்லை எனும் அளவுக்கு விரிந்து பரந்து இருக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக கடந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட தாக்குதலால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் புலம்பெயர்ந்ததன் விளைவாகத் தமிழும் அங்கெல்லாம் தடம் பதிக்கத் தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தாய்த் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குறை இருந்துவருகிறது. உலகப் புகழ் பெற்ற 380 ஆண்டு வரலாறு உள்ள உலகின் தொன்மையான கல்விச்சாலையில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று ஓர் இருக்கை இல்லையே என்பதுதான் அது.

உலகச் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் (ஹீப்ரூ), மான்டிரின் (சீனம்), பாரஸீகம், தமிழ் ஆகியவற்றில் தமிழைத் தவிர ஏனைய ஆறு மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டுமென்றால், 60 லட்சம் டாலர், அதாவது ஏறத்தாழ ரூ.39 கோடி அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆதாரத்தொகையாக கட்ட வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் கேட்கிறது. ஏனைய ஆறு உலக செம்மொழிகளுக்கு இதுபோல ஆதாரத்தொகை கோரப்பட்டதா, அது யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. அது குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழ் மீது தாளாப் பற்றுக்கொண்ட இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜானகிராமன், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் திருஞானசம்பந்தம், பேராசிரியர் மு. ஆறுமுகம், தொழிலதிபர் பால்பாண்டியன் உள்ளிட்ட பலர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்பட்டாக வேண்டும் என்கிற முயற்சியில் பேராசிரியர் வைதேகி ஹெர்பட்டின் அடிச்சுவட்டில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். வரும் ஜூன் மாதத்திற்குள் இருக்கை தொடங்குவதற்கான ஆதாரத் தொகையைக் கட்டியாக வேண்டும் என்கிற நிலையில், இப்போது தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

சில பின்னணிகளை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிக்கப்பட்டபோது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் வேண்டுமென்றும், அதற்கு அந்த நிறுவனம் ஆவன செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுவரை ஓர் இருக்கைகூட அவ்வாறு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதாவது ஒருமுறை கூட்டப்படும் உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை எல்லாம் செய்யாத ஆய்வுகளையா ஹார்வர்டு பல்கலைக்கழகம் செய்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை.

சாதாரணமாக இருக்கைகளை அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் அமைப்பதில்லை. மொழியின் சிறப்பையும் பெருமைகளையும் உணர்ந்து வேற்று நாட்டவர்களும் வேற்று மொழியினரும் அந்த மொழிக்கான இருக்கைகளை அவர்களது பல்கலைக்கழகங்களில் அமைப்பதுதான் வழக்கம்.

இந்தியாவிலேயே எடுத்துக்கொண்டாலும்கூட, அண்டை மாநிலங்களிலுள்ள கேரள, கர்நாடக, ஆந்திர பல்கலைக்கழகங்களிலும், தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கு இருக்கை இருக்கிறது.
தமிழ் குறித்து நமக்குள்ளே பழம்பெருமை பேசுகிறோமே தவிர, உலகளாவிய அளவில் ஏனைய செம்மொழிகள் குறித்துத் தெரிந்திருப்பதுபோலத் தமிழையும் தெரியவைக்க நாம் தவறிவிட்டதால்தான் இப்போது ஆதாரத்தொகை வழங்கி ஹார்வர்டில் இருக்கை அமைக்க வேண்டிய நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டிருக்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் சில ஆய்வுகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழி தமிழ் என்றும், தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம், சம்ஸ்கிருதத்தில் பாணினி எழுதியிருக்கும் இலக்கண நூலிலிருந்து உருவானது என்றும் தெரிவிக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் இருக்கை இருந்திருக்குமேயானால், இப்படி ஓர் ஆய்வு அப்போதே, அங்கேயே மறுக்கப்பட்டிருக்கும். எதிர்வினை எழுந்திருக்கும். ஆதாரத் தொகையை வழங்கியாவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென இருக்கை அமைக்க வேண்டும் என்பதற்கு இதுதான் காரணம்.

தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இதற்கு நிதி வழங்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ், தமிழ் என்று முழங்கிப் பதவிக்கு வந்து, அரைநூற்றாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின், தமிழ் உணர்வுள்ள முன்னணி கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் ரூ.40 கோடி என்பது சில்லறைப் பணம்.

தங்கள் கட்சியின் சார்பில் இவர்கள் இதற்குள் முழுப்பணத்தையும் தந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துத் தங்களது தமிழ் உணர்வை மெய்ப்பித்திருக்க வேண்டாமா?






..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)




No comments:

Post a Comment