Thursday, November 23, 2017

இந்தியாவின் நதிகள் இணைப்பு; இயற்கைக்கு எதிரானது


நீண்டகால தாமதத்திற்குப் பிறகு இந்தியாவின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும், வறட்சியையும் எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தீர்வு என்கிற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது. 87 பில்லியன் டாலர் (ரூ. சுமார் 5.6 லட்சம் கோடி) செலவிலான இந்தத் திட்டத்தின் பயனால் இந்தியாவின் முக்கிய நதிகள் பல இணைக்கப்பட இருக்கின்றன. 

இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் மூலம் கங்கை உள்ளிட்ட இந்தியாவின் 60 நதிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதனால் பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் சேதம் கணிசமாகக் குறையுமென்று அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல், பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி தர முடியும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.

கடந்த மாதம் இந்தியாவின் பல பாகங்கள், அண்டை நாடுகளாள வங்கதேசம், நேபாளம் ஆகியவை பருவமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை எதிர்கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்தியாவின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன என்றால், இந்த ஆண்டு கூடுதலாக பெய்த பருவமழையினால் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்தது.

இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்தத் திட்டத்தால் கால்வாய்கள் மூலம் நதிகள் இணைக்கப்படுவது மட்டுமல்ல, பெரிய அணைகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சார உற்பத்திக்கும் வழிகோலப்படுகிறது.

மத்திய இந்தியாவில் ஓடும் கர்ணாவதி என்கிற கென் நதியில் ஓர் அணை கட்டப்பட இருக்கிறது. சுமார் 425 கி.மீ. நீளமுள்ள கென் நதியிலிருந்து 22 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு பெட்வா என்கிற நதியுடன் இணைக்கப்படுகிறது. இந்த இரு நதிகளுமே பா.ஜ.க ஆட்சியிலுள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்வதால் நதிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த கென் - பெட்வா திட்டம் பிரதமர் செயல்படுத்த விரும்பும் ஏனைய நதி இணைப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும். 

கென் - பெட்வா திட்டத்தைத் தொடர்ந்து அரசின் கவனம் கங்கை, கோதாவரி, மகாநதி ஆகிய நதிகளை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நதிகளில் ஆங்காங்கே அணைகளும், தடுப்பணைகளும் கட்டப்படுவதுடன் கால்வாய் வலைப்பின்னல்களும் உருவாக்கப்படும்போது அது வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இப்போதைக்கு கென் - பெட்வா நதி இணைப்புத் திட்டம் அரசின் முன்னுரிமை பெற்றிருப்பதால் இதற்கான எல்லா அனுமதிகளும் அவசர கதியில் தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கிந்தியாவில் பாயும் பார் - தாபி நதியை நர்மதாவுடனும், தாமன் கங்கா நதியை பிஞ்சல் நதியுடனும் இணைப்பதற்கான திட்டப் பணிகளின் அடிப்படை வேலைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதில் வியப்பில்லை. 

நதிகளை இணைக்கும் திட்டம் 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசால் முதலில் முன்மொழியப்பட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பில்லாததாலும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

ஒருபுறம், நதிகளை இணைக்கும் திட்டத்தில் அரசு முனைப்பு காட்டும்போது, மற்றொருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தத் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கென் நதி, பன்னா புலிகள் சரணாலயத்தின் வழியாகப் பாய்வதால் அந்த நதியில் ஏற்படுத்தப்படும் செயற்கை மாற்றங்கள் புலிகள் சரணாலயத்தை பெரும் அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கென் நதியில் அணை கட்டுவதற்காக அந்த நதி பாயும் வழியிலுள்ள காடுகளில் 6.5% அழிக்கப்பட்டாக வேண்டும். நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்படும் 10 மலைவாழ் கிராமங்களும், 2,000-த்துக்கும் அதிகமான குடும்பங்களும் இடம் பெயர்ந்தாக வேண்டும். இதற்கெல்லாம் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. 

கென் நதியின் மீது எழுப்பப்படும் 250 அடி உயரமும் இரண்டு கி.மீ. நீளமுள்ள உள்ள அணையால் 9,000 ஹெக்டேர் காடுகள் நீரில் மூழ்கும். நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும்பாலான பகுதி பன்னா புலிகள் சரணாலயத்தை ஆக்கிரமிக்கும் என்பது மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்திலுள்ள உலக கலாசார சின்னமான கஜுராஹோ ஆயத்துக்கு வெகு அருகில் அமையும். இதனால் அந்த வரலாற்றுச் சின்னம் பாதிக்கப்படலாம். 

உலகளாவிய அளவில் பெரிய அணைகள் கட்டுவது தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளை இணைப்பது என்பது பயனுள்ளதாகத் தோன்றினாலும் அது சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இயற்கை நடைமுறைக்கும் எதிரானதாக அமையக்கூடும் என்பதுதான் உண்மை!



..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)


உலகில் அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு இந்தியா


உலகில் மிக அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு என்று இந்தியா அடைந்திருக்கும் 'பெருமை' குறித்து நாம் மகிழ்ச்சி அடையவா முடியும்? 2000 முதல் 2015 வரையிலான 15 வருடங்களில் மரணமடைந்திருக்கும் ஐந்து வயதிற்கும் கீழேயான குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடி 90 லட்சம். ஒட்டுமொத்த உலக எண்ணிக்கையில் இது 20%. 

தெற்காசியாவில், பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த 10 லட்சம் சிசுக்களில், ஏழு லட்சம் சிசுக்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்கிறது யுனிசெஃப் அறிக்கை. அதன்படி 2015 வரையிலான உலக சிசு மரணங்களில் 26% இந்தியாவைச் சேர்ந்தவை. 

வேடிக்கை என்னவென்றால், நம்மைவிட நேபாளம், வங்க தேசம், பூடான் ஆகியவை சிசு மரண விகிதத்தில் குறைவாக இருக்கின்றன. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் இந்தியாவைவிட மோசமானதாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தாய் - சேய் நலம் சரியாகப் பேணப்படுவதில்லை என்பதும், நோய்த் தடுப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும்தான் முக்கியமான காரணங்கள்.

இந்தியாவிலுள்ள பேறுகால மகளிர் பெரும்பாலானோருக்கு பொது சுகாதார அமைப்புகள்தான் ஒரே நம்பிக்கை. இவற்றின் மூலம்தான் கர்ப்பிணிப் பெண்களும், பால் வழங்கும் நிலையில் உள்ள தாய்மார்களும் மகப்பேறுக்கும் சிசுப் பாதுகாப்புக்கும் மருத்துவ வசதி பெற முடியும். குறிப்பாக, 'டிப்தீரியா', 'டெட்டனஸ்' உள்ளிட்ட தடுப்பூசிகள் போட வேண்டிய நிலையிலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பொது சுகாதார மையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.

போலியோவைப் பொருத்தவரை, இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதற்கும், ஏனைய வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கும் பொது சுகாதார மையங்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன.

இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். அதனால்தானோ என்னவோ, உலகிலேயே மிக அதிக அளவிலான - ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் - குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு பலியாகின்றன. இவையெல்லாம் அரசின் கவனத்துக்கு வராததல்ல. 

இதுகுறித்த விழிப்புணர்வும் செயல்திட்டங்களும் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும்கூட, அதேநேரத்தில் சில குறிப்பிட்ட காரணிகளால் ஏற்படும் குழந்தை மரண விகிதம் இந்தியாவில் குறைந்திருப்பதாக 'லான்செட்' மருத்துவ இதழ் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

பிரசவ கால மரணங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3.3% குறைந்திருக்கிறது. ஒன்று முதல் 59 மாதங்களுக்கு உள்ளேயுள்ள குழந்தைகள் மரண விகிதம் 5.4% குறைந்திருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டம், பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் ஊழலும் முனைப்பின்மையும் காணப்பட்டாலும்கூட, இந்தியாவில் கிராமப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளை எதிர்கொள்வதில் ஓரளவுக்கு அவை வெற்றியடைந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஆனால், 'லான்செட்' அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஒரு கருத்து வேதனை அளிக்கிறது. அந்த அறிக்கையின்படி தேசிய அளவிலான குழந்தை நலத் திட்டங்களுக்கு இணையாக மாநில அரசுகளும் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் இப்போதைய குழந்தைகள் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மரணம் தடுக்கப்பட்டிருக்கும். சுகாதாரம் என்பது மாநில அரசு சார்ந்தது என்பதால், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்கும் அடிப்படைப் பொறுப்பு அதனைச் சார்ந்தது. இந்தியாவில் பல மாநிலங்கள் இதுகுறித்து கவலைப்படுவதோ, கவனம் செலுத்துவதோ இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று.

பெரும்பாலான மாநிலங்களில் ஏனைய துறைகளுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டுவரும் அவலம் காணப்படுகிறது. 2013-14இல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தனி நபருக்கான அரசின் ஓராண்டு சராசரி ஒதுக்கீடு வெறும் ரூ.452 தான். இப்படி இருக்கும்போது, தங்களது முதல் பிறந்த நாளுக்கு முன்பு நாளொன்றுக்கு 981 குழந்தைகள் அந்த மாநிலத்தில் மரணமடைகின்றன என்கிற புள்ளிவிவரம் வியப்பை ஏற்படுத்தவில்லை.

அதேபோல சுகாதாரத்துக்கான அரசின் செலவினங்களில் மருத்துவமனைகளின் மூலம் தரப்படும் சிகிச்சைக்கு முன்னுரிமை தருவதுபோல, நோய்கள் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் மாநில அரசுகள் போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது என்பது சுகாதாரப் பாதுகாப்பில் மிக முக்கியமானது. இதன்மூலம் பல தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. ஆனால், அரசுகள் சுத்தமான குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை.

இந்தியாவில் குழந்தைகள் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுபவை, பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொள்வது, இளம் பெண்கள் கர்ப்பகாலத்தில் எடைக் குறைவுடன் இருத்தல், பிரசவத்திற்கு முன்னால் போதுமான கவனிப்பும் ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்காமல் இருத்தல் ஆகியவை. இதனால் அவர்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது. 

தென்னிந்திய மாநிலங்களைப்போல இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் கர்ப்பிணிகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுமேயானால் இந்தியாவை இந்த அவப்பெயரிலிலிருந்து காப்பாற்றிவிட முடியும்.

..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)


 

மரபணு மாற்றப்பட்ட பயிர்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள். யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும் அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால் மரணமடைந்திருக்கிறார்கள்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில்.

கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிரிடத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால், சமீபகாலமாகப் பருத்தியின் விளைச்சல் குறைந்துவருவதும் அதிகமான உரம் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமான பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் பொய்த்துவிட்டிருக்கிறது.

வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு பருத்திச் செடிகள் அதிக உயரம் வளரத் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஆறடி உயரம் வரை வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் உயரம் என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்தப் பயிர்களை வழக்கத்தைவிட அதிகமாகப் பூச்சிகள் தாக்கவும் செய்திருக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துத் தெளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் பல விவசாயிகள் மருந்தின் நெடியைச் சுவாசிக்க நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பவர்கள், முகமூடி அணிந்தோ, மூக்குப்பகுதியைத் துணியால் பாதுகாத்தபடியோதான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த அத்தனை விவசாயிகளுமே பருத்திப் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது அதன் விஷவாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, மரணமடைந்த அனைவருமே பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் என்கிற ரசாயனக் கலவையால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். சிலருக்குக் கண் பார்வை மங்கிப்போய் சில நாள்களுக்குப் பிறகு தான் பார்வை திரும்பியிருக்கிறது.

இந்த ஆண்டு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டவையா என்று விசாரித்தபோது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது என்பது புதிதொன்றுமல்ல. அதனால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று இந்த ஆண்டு பயிர்களின் உயரம் அதிகரித்ததுதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறது அரசின் விவசாயத் துறை.

2001 முதல் இதுவரை யவத்மால் பகுதியில் 3,920 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம் என்று வேடிக்கையாக யவத்மாலை அழைப்பது உண்டு. இப்போது பூச்சிக்கொல்லி விஷத்தால் தாக்கப்பட்டும் விவசாயிகள் மரணமடைந்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்களால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்கிற வாதமும் பொய்யானது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவற்றால் விளைநிலம் தரிசாவதுடன் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன. 

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, மான்சாட்டோ உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தரும் அழுத்தம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை. 

மரபணுமாற்ற விதைகள் விற்பனையாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக மக்கள் கருத்தை உருவாக்குவதில் சமர்த்தர்கள். ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும், ஊடகங்களை நம்ப வைப்பதிலும் தேர்ந்தவர்கள். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சொந்தமாக விதை சேகரித்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால், நாம் நிரந்தரமாக விதைகளுக்கு அவர்களை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய விவசாயமே அவர்களது கட்டுப்பாட்டில் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.

யவத்மால் விவசாயிகளின் நிலைமை, இந்தியாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!
 

..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை; தமிழ் உணர்வுள்ள கட்சிகளும், இயக்கங்களும் எங்கே?


இன்று தமிழும் தமிழ் இனமும் பூமிப்பந்தில் இல்லாத இடம் இல்லை எனும் அளவுக்கு விரிந்து பரந்து இருக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக கடந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட தாக்குதலால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் புலம்பெயர்ந்ததன் விளைவாகத் தமிழும் அங்கெல்லாம் தடம் பதிக்கத் தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தாய்த் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குறை இருந்துவருகிறது. உலகப் புகழ் பெற்ற 380 ஆண்டு வரலாறு உள்ள உலகின் தொன்மையான கல்விச்சாலையில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று ஓர் இருக்கை இல்லையே என்பதுதான் அது.

உலகச் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் (ஹீப்ரூ), மான்டிரின் (சீனம்), பாரஸீகம், தமிழ் ஆகியவற்றில் தமிழைத் தவிர ஏனைய ஆறு மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டுமென்றால், 60 லட்சம் டாலர், அதாவது ஏறத்தாழ ரூ.39 கோடி அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆதாரத்தொகையாக கட்ட வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் கேட்கிறது. ஏனைய ஆறு உலக செம்மொழிகளுக்கு இதுபோல ஆதாரத்தொகை கோரப்பட்டதா, அது யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. அது குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழ் மீது தாளாப் பற்றுக்கொண்ட இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜானகிராமன், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் திருஞானசம்பந்தம், பேராசிரியர் மு. ஆறுமுகம், தொழிலதிபர் பால்பாண்டியன் உள்ளிட்ட பலர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்பட்டாக வேண்டும் என்கிற முயற்சியில் பேராசிரியர் வைதேகி ஹெர்பட்டின் அடிச்சுவட்டில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். வரும் ஜூன் மாதத்திற்குள் இருக்கை தொடங்குவதற்கான ஆதாரத் தொகையைக் கட்டியாக வேண்டும் என்கிற நிலையில், இப்போது தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

சில பின்னணிகளை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிக்கப்பட்டபோது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் வேண்டுமென்றும், அதற்கு அந்த நிறுவனம் ஆவன செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுவரை ஓர் இருக்கைகூட அவ்வாறு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதாவது ஒருமுறை கூட்டப்படும் உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை எல்லாம் செய்யாத ஆய்வுகளையா ஹார்வர்டு பல்கலைக்கழகம் செய்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை.

சாதாரணமாக இருக்கைகளை அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் அமைப்பதில்லை. மொழியின் சிறப்பையும் பெருமைகளையும் உணர்ந்து வேற்று நாட்டவர்களும் வேற்று மொழியினரும் அந்த மொழிக்கான இருக்கைகளை அவர்களது பல்கலைக்கழகங்களில் அமைப்பதுதான் வழக்கம்.

இந்தியாவிலேயே எடுத்துக்கொண்டாலும்கூட, அண்டை மாநிலங்களிலுள்ள கேரள, கர்நாடக, ஆந்திர பல்கலைக்கழகங்களிலும், தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கு இருக்கை இருக்கிறது.
தமிழ் குறித்து நமக்குள்ளே பழம்பெருமை பேசுகிறோமே தவிர, உலகளாவிய அளவில் ஏனைய செம்மொழிகள் குறித்துத் தெரிந்திருப்பதுபோலத் தமிழையும் தெரியவைக்க நாம் தவறிவிட்டதால்தான் இப்போது ஆதாரத்தொகை வழங்கி ஹார்வர்டில் இருக்கை அமைக்க வேண்டிய நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டிருக்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் சில ஆய்வுகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழி தமிழ் என்றும், தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம், சம்ஸ்கிருதத்தில் பாணினி எழுதியிருக்கும் இலக்கண நூலிலிருந்து உருவானது என்றும் தெரிவிக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் இருக்கை இருந்திருக்குமேயானால், இப்படி ஓர் ஆய்வு அப்போதே, அங்கேயே மறுக்கப்பட்டிருக்கும். எதிர்வினை எழுந்திருக்கும். ஆதாரத் தொகையை வழங்கியாவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென இருக்கை அமைக்க வேண்டும் என்பதற்கு இதுதான் காரணம்.

தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இதற்கு நிதி வழங்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ், தமிழ் என்று முழங்கிப் பதவிக்கு வந்து, அரைநூற்றாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின், தமிழ் உணர்வுள்ள முன்னணி கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் ரூ.40 கோடி என்பது சில்லறைப் பணம்.

தங்கள் கட்சியின் சார்பில் இவர்கள் இதற்குள் முழுப்பணத்தையும் தந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துத் தங்களது தமிழ் உணர்வை மெய்ப்பித்திருக்க வேண்டாமா?






..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)