மரபணு
மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள்.
யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி
உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான
யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து
அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும்
அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால்
மரணமடைந்திருக்கிறார்கள்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில்.
கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிரிடத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால், சமீபகாலமாகப் பருத்தியின் விளைச்சல் குறைந்துவருவதும் அதிகமான உரம் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமான பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் பொய்த்துவிட்டிருக்கிறது.
வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு பருத்திச் செடிகள் அதிக உயரம் வளரத் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஆறடி உயரம் வரை வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் உயரம் என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்தப் பயிர்களை வழக்கத்தைவிட அதிகமாகப் பூச்சிகள் தாக்கவும் செய்திருக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துத் தெளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் பல விவசாயிகள் மருந்தின் நெடியைச் சுவாசிக்க நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பவர்கள், முகமூடி அணிந்தோ, மூக்குப்பகுதியைத் துணியால் பாதுகாத்தபடியோதான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த அத்தனை விவசாயிகளுமே பருத்திப் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது அதன் விஷவாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, மரணமடைந்த அனைவருமே பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் என்கிற ரசாயனக் கலவையால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். சிலருக்குக் கண் பார்வை மங்கிப்போய் சில நாள்களுக்குப் பிறகு தான் பார்வை திரும்பியிருக்கிறது.
இந்த ஆண்டு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டவையா என்று விசாரித்தபோது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது என்பது புதிதொன்றுமல்ல. அதனால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று இந்த ஆண்டு பயிர்களின் உயரம் அதிகரித்ததுதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறது அரசின் விவசாயத் துறை.
2001 முதல் இதுவரை யவத்மால் பகுதியில் 3,920 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம் என்று வேடிக்கையாக யவத்மாலை அழைப்பது உண்டு. இப்போது பூச்சிக்கொல்லி விஷத்தால் தாக்கப்பட்டும் விவசாயிகள் மரணமடைந்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்களால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்கிற வாதமும் பொய்யானது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவற்றால் விளைநிலம் தரிசாவதுடன் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, மான்சாட்டோ உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தரும் அழுத்தம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை.
மரபணுமாற்ற விதைகள் விற்பனையாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக மக்கள் கருத்தை உருவாக்குவதில் சமர்த்தர்கள். ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும், ஊடகங்களை நம்ப வைப்பதிலும் தேர்ந்தவர்கள். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சொந்தமாக விதை சேகரித்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால், நாம் நிரந்தரமாக விதைகளுக்கு அவர்களை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய விவசாயமே அவர்களது கட்டுப்பாட்டில் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
யவத்மால் விவசாயிகளின் நிலைமை, இந்தியாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!
.....................................................................
மக்கள் நலம் விரும்பும்
BKPK.
....................................................................
(நன்றி: தினமணி)
No comments:
Post a Comment