Thursday, November 23, 2017

உலகில் அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு இந்தியா


உலகில் மிக அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு என்று இந்தியா அடைந்திருக்கும் 'பெருமை' குறித்து நாம் மகிழ்ச்சி அடையவா முடியும்? 2000 முதல் 2015 வரையிலான 15 வருடங்களில் மரணமடைந்திருக்கும் ஐந்து வயதிற்கும் கீழேயான குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடி 90 லட்சம். ஒட்டுமொத்த உலக எண்ணிக்கையில் இது 20%. 

தெற்காசியாவில், பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த 10 லட்சம் சிசுக்களில், ஏழு லட்சம் சிசுக்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்கிறது யுனிசெஃப் அறிக்கை. அதன்படி 2015 வரையிலான உலக சிசு மரணங்களில் 26% இந்தியாவைச் சேர்ந்தவை. 

வேடிக்கை என்னவென்றால், நம்மைவிட நேபாளம், வங்க தேசம், பூடான் ஆகியவை சிசு மரண விகிதத்தில் குறைவாக இருக்கின்றன. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் இந்தியாவைவிட மோசமானதாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தாய் - சேய் நலம் சரியாகப் பேணப்படுவதில்லை என்பதும், நோய்த் தடுப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும்தான் முக்கியமான காரணங்கள்.

இந்தியாவிலுள்ள பேறுகால மகளிர் பெரும்பாலானோருக்கு பொது சுகாதார அமைப்புகள்தான் ஒரே நம்பிக்கை. இவற்றின் மூலம்தான் கர்ப்பிணிப் பெண்களும், பால் வழங்கும் நிலையில் உள்ள தாய்மார்களும் மகப்பேறுக்கும் சிசுப் பாதுகாப்புக்கும் மருத்துவ வசதி பெற முடியும். குறிப்பாக, 'டிப்தீரியா', 'டெட்டனஸ்' உள்ளிட்ட தடுப்பூசிகள் போட வேண்டிய நிலையிலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பொது சுகாதார மையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.

போலியோவைப் பொருத்தவரை, இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதற்கும், ஏனைய வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கும் பொது சுகாதார மையங்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன.

இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். அதனால்தானோ என்னவோ, உலகிலேயே மிக அதிக அளவிலான - ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் - குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு பலியாகின்றன. இவையெல்லாம் அரசின் கவனத்துக்கு வராததல்ல. 

இதுகுறித்த விழிப்புணர்வும் செயல்திட்டங்களும் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும்கூட, அதேநேரத்தில் சில குறிப்பிட்ட காரணிகளால் ஏற்படும் குழந்தை மரண விகிதம் இந்தியாவில் குறைந்திருப்பதாக 'லான்செட்' மருத்துவ இதழ் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

பிரசவ கால மரணங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3.3% குறைந்திருக்கிறது. ஒன்று முதல் 59 மாதங்களுக்கு உள்ளேயுள்ள குழந்தைகள் மரண விகிதம் 5.4% குறைந்திருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டம், பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் ஊழலும் முனைப்பின்மையும் காணப்பட்டாலும்கூட, இந்தியாவில் கிராமப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளை எதிர்கொள்வதில் ஓரளவுக்கு அவை வெற்றியடைந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஆனால், 'லான்செட்' அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஒரு கருத்து வேதனை அளிக்கிறது. அந்த அறிக்கையின்படி தேசிய அளவிலான குழந்தை நலத் திட்டங்களுக்கு இணையாக மாநில அரசுகளும் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் இப்போதைய குழந்தைகள் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மரணம் தடுக்கப்பட்டிருக்கும். சுகாதாரம் என்பது மாநில அரசு சார்ந்தது என்பதால், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்கும் அடிப்படைப் பொறுப்பு அதனைச் சார்ந்தது. இந்தியாவில் பல மாநிலங்கள் இதுகுறித்து கவலைப்படுவதோ, கவனம் செலுத்துவதோ இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று.

பெரும்பாலான மாநிலங்களில் ஏனைய துறைகளுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டுவரும் அவலம் காணப்படுகிறது. 2013-14இல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தனி நபருக்கான அரசின் ஓராண்டு சராசரி ஒதுக்கீடு வெறும் ரூ.452 தான். இப்படி இருக்கும்போது, தங்களது முதல் பிறந்த நாளுக்கு முன்பு நாளொன்றுக்கு 981 குழந்தைகள் அந்த மாநிலத்தில் மரணமடைகின்றன என்கிற புள்ளிவிவரம் வியப்பை ஏற்படுத்தவில்லை.

அதேபோல சுகாதாரத்துக்கான அரசின் செலவினங்களில் மருத்துவமனைகளின் மூலம் தரப்படும் சிகிச்சைக்கு முன்னுரிமை தருவதுபோல, நோய்கள் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் மாநில அரசுகள் போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது என்பது சுகாதாரப் பாதுகாப்பில் மிக முக்கியமானது. இதன்மூலம் பல தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. ஆனால், அரசுகள் சுத்தமான குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை.

இந்தியாவில் குழந்தைகள் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுபவை, பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொள்வது, இளம் பெண்கள் கர்ப்பகாலத்தில் எடைக் குறைவுடன் இருத்தல், பிரசவத்திற்கு முன்னால் போதுமான கவனிப்பும் ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்காமல் இருத்தல் ஆகியவை. இதனால் அவர்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது. 

தென்னிந்திய மாநிலங்களைப்போல இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் கர்ப்பிணிகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுமேயானால் இந்தியாவை இந்த அவப்பெயரிலிலிருந்து காப்பாற்றிவிட முடியும்.

..................................................................... 

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................



(நன்றி: தினமணி)


 

No comments:

Post a Comment